சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக பாலமலைப் பகுதிக்குச் செல்லும் மண் சாலைகளில் பாறைகள் சரிந்ததால், சுமார் 20 மலை கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடிக்கு மேல் உள்ள கொளத்தூர், பாலமலை ஊராட்சிக்கு உட்பட்ட 33 கிராமங்களில் 4,000-க்கும் மேற்பட்ட மலையாளி இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இதில், சுமார் 20 கிராமங்களுக்குப் பிரதான சாலையாக விளங்கும் கண்ணாமூச்சி கிராமத்தில் இருந்து பாலமலைக்குச் செல்லும் 7.30 கி.மீ. மண்சாலையில், நேற்றிரவு பெய்த கனமழையால் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, நேற்று அதிகாலை மலைப்பகுதிக்குச் செல்லும் 4-வது வளைவுப் பகுதியில், அருகிலுள்ள குன்றுகளில் இருந்து பெரிய பாறைக் கற்கள் பெயர்ந்து சாலையில் விழுந்தன.
இதனால், பாலமலைக்கான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. காலையில் அடிவார கிராமங்களுக்குச் செல்ல முயன்ற மக்களும், அடிவாரத்தில் இருந்து மலைக் கிராமங்களுக்குச் செல்ல முயன்றவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், பாலமலையில் இயங்கி வரும் 5 துவக்கப்பள்ளிகள், ஒரு நடுநிலை மற்றும் ஒரு உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு, அடிவார கிராமங்களிலிருந்து வரும் பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். தகவலறிந்து விரைந்த வருவாய்த்துறை அதிகாரிகள், பாறைகளை அகற்றும் பணியைத் தொடங்கி, மாலை வேளையில் போக்குவரத்தைத் துரிதமாக சீரமைத்தனர்.












