திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து ஆலாடு, ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி உள்ளிட்ட ஊர் வழியாக மீஞ்சூர் வரை விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நேற்று (ஆகஸ்ட் 23) மீஞ்சூருக்கு சென்றுவிட்டு, மீண்டும் பொன்னேரிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது.
முன்னதாக பெய்த தொடர் கனமழை காரணமாக பொன்னேரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரிதும் அவதியுற்றனர். இந்நிலையில் தான், இந்த அரசுப் பேருந்து காட்டூரில் இருந்து தத்தைமஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து அங்கிருந்த ஏரிக்கரை தடுப்புச் சுவர் மீது மோதியது.
இதில் பேருந்தின் முன்பக்க சக்கரம் அந்தரத்தில் நின்றது. இதையடுத்து, அச்சத்தில் உறைந்துபோன பயணிகள், நடத்துனர் மற்றும் ஓட்டுநர் உடனே பேருந்தில் இருந்து கீழே இறங்கினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடனே சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும், போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் விரைந்தனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்தின் முன் சக்கரம் பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.