இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உச்சத்தை எட்டி வருவது, நடுத்தர மக்களைப் பாதித்தாலும், முதலீட்டாளர்களின் கவனத்தை மாற்றுப் பக்கம் திருப்பியுள்ளது. பாரம்பரிய முதலீடான தங்கம், பங்குகள், பத்திரங்கள் போன்ற பல சொத்து வகைகளை விஞ்சி, தற்போது வெள்ளியானது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. 2025ஆம் ஆண்டில் வெள்ளி விலை வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளதுடன், தங்கத்தை விட முதலீட்டாளர்கள் வெள்ளி பக்கம் திரும்ப தொடங்கி உள்ளனர்.
சர்வதேச சந்தையில் புதிய சாதனை :
வெள்ளியின் இந்த எழுச்சி குறித்து சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை $56.78 என்ற புதிய சாதனையை எட்டியுள்ளது. இந்திய வெள்ளி மற்றும் நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் (IBJA) துணைத் தலைவரும், ஆஸ்பெக்ட் குளோபல் வென்ச்சர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியுமான காம்போஜ் இதுகுறித்து பேசும்போது, பெடரல் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகளும், அமெரிக்க டாலரின் மதிப்பு படிப்படியாக குறைந்து வருவதும், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் வெள்ளியைப் பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகப் பார்க்க முக்கியக் காரணம் என்று கூறினார்.
தொழில்துறை தேவையும் ஒரு காரணம் :
வெள்ளியின் விலை உயர்வுக்கு நீண்டகால தொழில்துறை தேவையும் முக்கிய காரணியாக உள்ளது. சோலார் பேனல்கள், பேட்டரிகள், சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் அதிகளவில் வெள்ளியை பயன்படுத்துகின்றன. இந்த தொழில்துறை நுகர்வு, பாதுகாப்பான முதலீட்டு உணர்வு மற்றும் விநியோக கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் கலவையானது, வெள்ளி விலையை மேலும் உயர்த்தும் என்று காம்போஜ் குறிப்பிட்டார்.
நிபுணர்கள் கணிப்பு :
சந்தையின் தற்போதைய போக்கைக் கருத்தில் கொண்டு நிபுணர்கள் தெளிவான கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். வெள்ளியின் அடுத்த இலக்குகள் $58, $60, மற்றும் $65 ஆக உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் தொழில்துறை நுகர்வு, முதலீட்டாளர்கள் வெள்ளியை பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கும் உணர்வு மற்றும் விநியோக கட்டுப்பாடுகள் ஆகியவை இணைந்து இந்த விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இருப்பினும், முதலீடுகள் செய்வதற்கு முன், நிதி நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Read More : டிட்வா புயல் பாதிப்பு..!! விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பீடு..? தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!













