ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொங்கணாபுரத்தில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது.
சேலம் மாவட்டம் வீரகனூர், மேச்சேரி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையானது, வாரத்தில் சனி மற்றும் புதன், வெள்ளி ஆகிய நாட்களில் நடைபெறும். பெரும்பாலும் பண்டிகை நாட்களில் வழக்கத்தை விட அதிக விற்பனை இருக்கும்.
அந்த வகையில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் பகுதியில் நடைபெற்ற கால்நடை சந்தையில் ரூ.1.50 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த சந்தைக்கு வீரகனூர், தலைவாசல், தேவியாக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
அதேபோல் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் நேற்று (02.08.2025) கூடிய வாராந்திர சனி சந்தையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆடுகள், கோழிகள், காய்கறிகள், பழங்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. ஆடுகள், கோழிகளின் விலை உயர்ந்து விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த சந்தையில் 10 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு, வெள்ளாடு ரூ.6,000 முதல் ரூ.9,000 வரை விற்பனையானது. 20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு, வெள்ளாட்டுக் கிடாய்கள் ரூ.11,000 முதல் ரூ.17,000 வரை விற்பனையானது. அதேபோல், 30 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு மற்றும் வெள்ளாட்டுக் கிடாய் ரூ.18,000 முதல் ரூ.30,000 வரை கூட விற்பனையானது. கடந்த வாரத்தை விட ஆடுகள் 1,000 முதல் 2,000 வரை அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. மொத்தமாக கொங்கணாபுரம் சனி சந்தையில் ரூ.6 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
Read More : முழு கொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை.. கரையோர மக்களுக்கு அறிவுரை..!!
Leave a Reply