தம்பியின் மனைவி கொடுத்த மானபங்க புகாரால் மனமுடைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நைனா. இவருக்கு வயது 65. இவரது தம்பி பன்னீர்செல்வம். இவரது மனைவி சரிதா (45). இந்நிலையில், நைனாவுக்கும், தம்பி பன்னீர்செல்வத்துக்கும் நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தன்னை தாக்கி, மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக நைனா மீது அவரது கொழுந்தியாள் சரிதா காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், நைனாவை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் மன உளைச்சலில் இருந்த நைனா, திங்கட்கிழமை அன்று தனது நிலத்தில் உள்ள மோட்டார் ரூமுல் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
அதற்கு முன் அவர் எழுதிய 3 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ”எனது பாட்டி எனக்கு கொடுத்த நிலத்தில் சரிதா, பங்கு கேட்டார். இதுதொடர்பான வழக்கில் எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. எனவே, என்னை பழிவாங்கும் நோக்கில், என் மீது போலீசில் மானபங்க புகார் கொடுத்தார்.
மேலும், போலீஸ் துணையுடன் என்னை வீட்டை காலி செய்யுமாறு மிரட்டினர். விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு சென்று, கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர். இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டரும் உடந்தையாக இருக்கிறார். நான் சொல்வது அனைத்தும் உண்மை. தவறாக வேறு எதும் கூறவில்லை” என்று எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நைனா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, நைனாவின் மனைவி பழனியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா, சரிதா உள்ளிட்ட 7 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கை என்பது வாழ்க்கை ஒரு போராட்டமே. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள், துன்பங்கள், தோல்விகள், மன அழுத்தங்கள் வரும். அந்த சமயங்களில் பலர் மன அமைதியை இழந்து “இந்த வாழ்க்கையே வேண்டாம்” என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எந்த பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது.
வாழ்க்கை என்பது வலியை மட்டும் அல்ல, வாய்ப்புகளையும் கொண்டது. இந்த செய்தியை மனதில் கொண்டு, தற்கொலை பற்றி யாராவது சிந்தித்தால் கூட, அவர்களுக்கு நேர்மையான உரையாடல், மனநல ஆலோசனை மற்றும் ஆதரவுகள் தேவை என்பதையும் நாம் உணர வேண்டியது மிக முக்கியம். மேலும் உதவிக்கு சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 2464 0050 (24 மணி நேரம்), மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்).
Leave a Reply