ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே மக்களை சந்தித்துப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த ஆம்புலன்ஸ் ஓட்டிய டிரைவர் விளக்கம் அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “இந்த அணைக்கட்டு தொகுதி அதிமுகவின் கோட்டை. அதிமுகவின் பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்திற்கு நடுவில் வேண்டுமென்றே ஆள் இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி வைத்து கேவலமான செயலில் இந்த அரசாங்கம் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.
எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்ய முடியாது. திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். கூட்டத்திற்கு இடையே இப்படி ஆம்புலன்ஸ் வந்து செல்லும்போது, மக்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், என்ன செய்வது..? ஆம்புலன்ஸில் நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே போகிறது. இதை 30 கூட்டத்தில் பார்த்துவிட்டேன்.
அடுத்த கூட்டத்தில் இதுபோல் கூட்டம் நடக்கும்போது ஆம்புலன்ஸ் வந்தால், ஆம்புலன்ஸ் ஓட்டி வருபவரை நாங்கள் நோயாளியாக்கி, அதே ஆம்புலன்சில் அனுப்பி விடுவோம். எதிர்க்கட்சியின் கூட்டம் நடந்தால், அதற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். இது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக அணைக்கட்டில் ஆம்புலன்ஸ் ஓட்டிய அந்த டிரைவரே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், நான் நோயாளி ஒருவரை ஏற்றி வருவதற்காகவே அவ்வழியாக சென்றேன். பொதுவாக நோயாளி மோசமான உடல்நிலையில் இருந்தால், விளக்கு போட்டு செல்வோம். அப்படிதான் நானும் சென்றேன்.
சென்ட்ராயன் என்ற 60 வயது நபருக்கு உடல்நிலை மோசமாக இருந்து. இதனால், அவரை அழைக்க சென்றேன். நான் சென்ற போது 10 மணி. எனவே, கூட்டம் முடிந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அங்கே கூட்டம் நடந்து கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல் அதே வழியில் சென்றேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.