தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கவும், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு “முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” என்ற சிறப்பு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பெயரில் அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்பு நிதியாக செலுத்தி வருகிறது. இந்த தொகை, அந்த குழந்தையின் 18 வயதுக்கு பிறகு, கல்வி அல்லது திருமணச் செலவுகளுக்குப் பேருதவியாக இருக்கும்.
எவ்வளவு தொகை கிடைக்கும்..?
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்கும் பட்சத்தில், அந்த குழந்தையின் பெயரில் ரூ.50,000 செலுத்தப்படும். அதுவே, ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால், ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25,000 செலுத்தப்படும். இந்த தொகை ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். பெண் குழந்தைக்கு 18 வயது ஆனவுடன் வட்டியுடன் சேர்த்து முதிர்வு தொகை வழங்கப்படும்.
இந்த பலனைப் பெற வேண்டும் என்றால், அந்த பெண் குழந்தை குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருக்க வேண்டும். மேலும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. எதிர்காலத்தில் ஆண் குழந்தையை தத்தெடுக்க மாட்டோம் என்ற உறுதிமொழியையும் அளிக்க வேண்டும். இதில் குறிப்பாக பெற்றோரில் ஒருவர், கருத்தடை செய்திருக்க வேண்டும்.
குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்குள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். எனவே, தகுதியுள்ள பெற்றோர்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது மாவட்ட சமூக நல அலுவலகம் சென்றோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
➢ குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்
➢ வருமான சான்றிதழ்
➢ இருப்பிட சான்றிதழ்
➢ சாதி சான்றிதழ்
➢ பெற்றோரின் வயது சான்றிதழ்
➢ கருத்தடை செய்யப்பட்டதற்கான சான்றிதழ்
➢ ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்
➢ குடும்ப அட்டை
Read More : மனிதர்களின் மூளையை பெரிதும் பாதித்த கொரோனா..!! வழக்கத்தை விட 6 மாதங்கள் முதிர்ச்சி..!!