இந்தியர்கள் தினசரி காலையை ஒரு சூடான டீ கப்புடன் தொடங்குவது சாதாரணமான விஷயமாகிவிட்டது. வீட்டுக்குள் எப்போதும் வாசனை பரப்பும் ஏலக்காய், கிராம்பு, இஞ்சி போன்ற மசாலாக்களால் உருவாகும் இந்த தேநீர், வெறும் பானம் அல்ல. அது நம் கலாச்சாரம், உறவுகள் மற்றும் வாழ்வியலின் ஒரு முக்கியமான அங்கமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த அன்றாட பழக்கத்தில் கூட, சமநிலை மிக அவசியம் என்பதை மறந்து விடுகிறோம்.
பெரும்பாலானோர் தினமும் பல முறை டீ அருந்தும் பழக்கத்தை வைத்துள்ளனர். ஒருபுறம் இது மனநிம்மதியை தரக்கூடியதாக இருந்தாலும், மறுபுறம் உடல்நலத்துக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக பிரபல டையட்டிஷியன் ருஜுதா திவேகர், “மிதமான அளவிலான டீ குடிப்பதே நன்மைகளைத் தரும்” என கூறியுள்ளார். தினமும் 2 முதல் 3 கப்புகள் வரை டீ குடிப்பதே போதுமானது. அதற்கு மேல் செல்பவர்கள் தங்களது பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அதிகமான டீ உடலுக்கு தேவையான சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் இடையூறு ஏற்படுத்தும்.
மேலும், இரவு நேர தூக்கத்தில் சிக்கல்கள் வருவதற்கும் காரணமாகிறது. இதைத் தவிர்க்க, மாலை 4 மணிக்குப் பிறகு டீ குடிப்பதை தவிர்க்கலாம். டீயை உணவுக்கு மாற்றாக அருந்தும் பழக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும்.
டீ என்பது தனித்து ஒரு பானம் மட்டுமல்ல.. அதனுடன் சாப்பிடும் உணவுகளும் உடல்நலத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. பெரும்பாலானவர்கள் டீயுடன் ரஸ்க், பிஸ்கட், பக்கோடா, கச்சோரி போன்ற தீவிரமான உணவுகளை சேர்த்து வருகின்றனர். இவை சுவையாக இருந்தாலும், உடலுக்கு தேவையற்ற கொழுப்புகளை அதிகமாக சேர்க்கும். இதற்குப் பதிலாக வறுத்த மக்கா, கருப்பு சன்னா போன்ற சத்தான சிற்றுண்டிகளை தேர்வு செய்தால், டீயுடன் சிறந்த ஆரோக்கியம் கிடைக்கும்.
டீ நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருக்கலாம், ஆனால் அதனுடன் தொடர்புடைய பழக்க வழக்கங்களை சிறிது மாற்றினால், அது நம்மை இன்னும் சீரான ஆரோக்கிய பாதையில் கொண்டு செல்லும். ஒரு நல்ல டீ நேரம் என்பது சுவையான பானத்தை மட்டுமல்ல, நம் உடல் மற்றும் மனதையும் மகிழ்விக்கும் அனுபவமாக இருக்க வேண்டும்.
Read More : PGCIL | மின்சாரத் துறையில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! மாதம் ரூ.1,20,000 வரை சம்பளம்..!!