சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தனது மகளிடம் என்னுடைய மாமனார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அவரை கைது செய்து சிறையில் அடைக்குமாறும் கூறியுள்ளார்.
இதையடுத்து, இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், விசாரணைக்காக புகாரளித்த இளம்பெண்ணின் மாமனார், காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மருமகள் தன் மீது பொய்யான புகார் அளித்திருப்பதாகவும், நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த சிறுமியை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, தனது தாத்தா தன்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றும் என்னுடைய அம்மா கொடுத்த புகாரில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிவித்தார். இதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
விசாரணையில், “தனது மாமனாரை சிறைக்கு அனுப்புவதற்காக மருமகள் பொய்யான புகாரை அளித்தது தெரியவந்தது. அதாவது, குற்றம்சாட்டப்பட்ட மாமனார், சொந்தமாக வீடு கட்டி, அதை வாடகைக்கு விட்டு மாதம் ரூ.60 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதித்து வருகிறார்.
ஆனால், அவரது மகன் அதாவது புகாரளித்த இளம்பெண்ணின் கணவர், எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால், மகனை அடிக்கடி அவர் திட்டி வந்துள்ளார். இதனால், அவரை பாலியல் வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பிவிட்டால் நாம் நிம்மதியாக இருக்கலாம் என மகன் திட்டம் போட்டுள்ளார்.
இதனால், தனது மனைவியை தூண்டிவிட்டு தனது தந்தையின் மீது பொய்யான புகார் கொடுக்க வைத்துள்ளார். இவை அனைத்தும் போலீசாரின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், பொய்யான புகார் அளித்த மருமகள் மீதும் அதற்கு தூண்டுதலாக இருந்த கணவன் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Read More : தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு.. ரூ.10 லட்சம் நிவாரணம்..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!