மனைவி அணியும் உடை மற்றும் அவரின் சமையலை விமர்சிப்பது கிரிமினல் குற்றமாக கருத முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு விவாகரத்தான நிலையில், 2022இல் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நடந்தது. ஆனால், இந்த திருமண வாழ்க்கையும் அவருக்கு நிலைக்கவில்லை. ஒன்றரை மாதங்களில் தனது கணவரை விட்டு பிரிந்துவிட்டார்.
புகுந்த வீட்டில் தன்னை கண்ணியமாக நடத்தவில்லை என அந்தப் பெண் புகார் அளித்தார். மேலும், கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதை மறைத்து திருமணம் செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். அதனடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்வதாக தீர்ப்பு வழங்கினர். நீதிபதிகள் வழங்கிய அந்த தீர்ப்பில், “உறவுகளுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு, பிரிந்துவிட்டால், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவது சாதாரணமாகி விட்டது.
திருமணத்திற்கு முன்பே மணமகனுக்கு இருக்கும் நிறை, குறைகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனம் நலம் பாதிக்கப்பட்டதை மறைத்ததாக பெண் கூறுகிறார். இது ஏற்கும்படியாக இல்லை. எனவே, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 498 ஏ பிரிவின் கீழ் இதை குற்றமாக கருத முடியாது. அதேபோல், மனைவியின் ஆடை, அவரின் சமையலை விமர்சிப்பதையும் குற்றமாக கருத முடியாது.
ஒரு வேளை அதை குற்றமாக கருதி வழக்கு தொடர்ந்தால் அது சட்ட நடைமுறைக்கு எதிரானது. கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அல்லது உறவினர்களால் ஒரு பெண்ணுக்கு கொடுமை இழைக்கப்பட்டால் மட்டுமே வழக்குப் பதிவு செய்ய முடியும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்” என்று அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
Read More : ரயில்வேயில் செவிலியர், பார்மசிஸ்ட் வேலை..!! மொத்தம் 434 காலியிடங்கள்..!! சம்பளம் எவ்வளவு..?