கொரோனா தடுப்பூசிகள் கடுமையான கோவிட்-19 தொற்றைத் தடுப்பதிலும், நீண்டகால கோவிட் அபாயத்தை குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் புதிய மற்றும் மிகவும் ஆச்சரியமான முடிவுகள் வெளிவந்துள்ளன. அதாவது, எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசிகள், மேம்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிர்வாழும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
தடுப்பூசிகளின் சிறப்பு என்ன..?
ஃப்ளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ‘நேச்சர்’ (Nature) என்ற புகழ்பெற்ற அறிவியல் இதழில் ஒரு புதிய ஆய்வை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வில், 1,000-க்கும் மேற்பட்ட மேம்பட்ட தோல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகள் ஆராயப்பட்டனர். இந்த நோயாளிகள், புற்றுநோய்க்கு சிகிச்சையாக, ‘இம்யூன் செக்பாயின்ட் இன்ஹிபிட்டர்ஸ்’ எனப்படும் நோயெதிர்ப்புச் சிகிச்சையைப் பெற்றவர்கள்.
இந்த நோயாளிகளில், சிகிச்சையைத் தொடங்குவதற்கு சுமார் 100 நாட்களுக்குள் மாடர்னா அல்லது பயோஎன்டெக்-பயர் எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள், தடுப்பூசி போடாதவர்களை காட்டிலும் 5 மடங்கு அதிக அளவுக்கு உயிர்வாழும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த முடிவுகள், நோயாளியின் வயது, மற்ற நோய்கள், புற்றுநோயின் தீவிரம் போன்ற அனைத்துக் காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்ட பின்னரும் உறுதியாகியுள்ளது. இது எப்படிச் சாத்தியமாகிறது என்பதை விளக்கிய ஓகியோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் நோயெதிர்ப்பு ஆராய்ச்சி நிபுணர் டாக்டர் ஜிஹாய் லி, “எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள், கொரோனாவை எதிர்ப்பதற்காக மட்டுமல்லாமல், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட நோயெதிர்ப்பு மண்டலத்தை தயார் நிலைக்கு கொண்டு வரலாம்” என்று கூறுகிறார்.
அதாவது, புற்றுநோய்க்கான நோயெதிர்ப்பு சிகிச்சையுடன் இணைந்து, உடலின் பாதுகாக்கும் முறையை மிகவும் தீவிரமாகவும், வேகமாகவும் செயல்பட வைக்கிறது. இது ஒரு புதிய நம்பிக்கை என்றாலும், இந்த மருத்துவ நன்மை இன்னும் முழுமையான ஆராய்ச்சி கட்டத்தில்தான் உள்ளது.
அமெரிக்க மருத்துவச் சங்கங்கள் இன்னும், “புற்றுநோயைக் குணப்படுத்த கோவிட் தடுப்பூசி போடுங்கள்” என்று அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கவில்லை. புற்றுநோய் நோயாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி போடுவதன் முக்கிய நோக்கம், கோவிட்-19 தொற்று மற்றும் அதன் கடுமையான பக்கவிளைவுகளைத் தடுப்பது மட்டும்தான் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கோவிட் தடுப்பூசிகள் தான் புற்றுநோயை உருவாக்குகின்றன என்ற தவறான வதந்தி நிலவுவது குறித்து மருத்துவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். “2020-இல் கோவிட் பரவல் காரணமாகப் பலரும் புற்றுநோய் பரிசோதனை செய்வதை குறைத்ததால், நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக பதிவானது. பின்னர், மக்கள் பரிசோதனை செய்தபோது, எண்ணிக்கை அதிகரித்தது. அதற்கு தடுப்பூசி காரணமல்ல” என்று டெக்சாஸ் ஆன்காலஜியைச் சேர்ந்த டாக்டர் ஜெஃப் யோரியோ விளக்கம் அளித்தார்.
மொத்தத்தில், இந்த ஆய்வு முடிவுகள், கோவிட் தடுப்பூசிகள் புற்றுநோய் நோயாளிகளுக்கு வாழ்வை அதிகரிக்கும் கூடுதல் சாத்தியத்தை காட்டினாலும், இதை உறுதி செய்ய மேலும் பெரிய அளவிலான மருத்துவ சோதனைகள் தேவை. கோவிட் தடுப்பூசிகள் தொற்றைத் தடுப்பதற்கே முக்கியம். ஆனால், அதன் ‘பக்க விளைவுகளில்’ ஒன்று நம்பமுடியாத அளவு நல்லதாக இருக்கும் என்றால், அது ஆராய்ச்சிக்கு ஒரு புதிய கதவை திறந்துள்ளது.













