கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா பெருந்தொற்று, உலகையே ஆட்டிப் படைத்தது. இந்த கொரோனா காலத்தில் பலரும் தங்களது வேலைகளை இழந்து, தினசரி வாழ்க்கையை நடத்தவே சிரமப்பட்டனர். மேலும், முழு ஊரடங்கு காரணமாக தெருவோர வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், மத்திய அரசு “பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பர் நிதி” (PM SVANidhi) என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே, தெருவோர வியாபாரிகளுக்கு எளிதான முறையில், எவ்வித பிணையமும் இல்லாமல் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாகும்.
இத்திட்டத்தின் கீழ் 3 கட்டங்களாக கடன் வழங்கப்படுகிறது. முதல் தவணையில் ரூ. 10,000, இரண்டாவது தவணையில் ரூ.20,000, மூன்றாவது தவணையில் ரூ.50,000 வழங்கப்படுகிறது. வாங்கிய கடனை சரியான நேரத்திலோ அல்லது முன்கூட்டியே திருப்பி செலுத்தினால், அந்த வியாபாரிகளுக்கு ஆண்டுக்கு 7% வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
இந்த மானிய தொகை, நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கு மாதம் ரூ.100 வரை கேஷ்பேக் வழங்கப்படும். இதன் மூலம் ஒரு வருடத்திற்கு ரூ.1,200 வரை ஊக்கத்தொகை பெற முடியும். வாங்கிய கடனை ஒரு வருட காலத்திற்குள் மாத தவணைகளில் கூட திருப்பிச் செலுத்தலாம்.
யாரெல்லாம் தகுதியானவர்கள்?
நகர்ப்புறம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் தொழில் செய்யும் அனைத்துத் தெருவோர வியாபாரிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும். இதற்கு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட விற்பனை சான்றிதழ்/அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். சான்றிதழ் இல்லாதவர்கள், நகராட்சி அலுவலகம் அல்லது நகர விற்பனைக் குழுவிடம் இருந்து பரிந்துரை கடிதம் பெற்று விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன் பெற ஆதார் அட்டை, வங்கி கணக்கு பாஸ்புக் மற்றும் விற்பனை சான்றிதழ் அல்லது பரிந்துரைக் கடிதம் தேவை.
விண்ணப்பிப்பது எப்படி..?
ஆன்லைன் முறை : pmsvanidhi.mohua.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, உங்கள் செல்போன் நம்பரை உள்ளிட வேண்டும். பிறகு உங்களுக்கு ஓடிபி வரும். அதை பதிவு செய்து உள் நுழைந்ததும் விண்ணப்பம் இருக்கும். அந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
ஆப்லைன் முறை : உங்கள் வீட்டருகே உள்ள பொது சேவை மையத்தை அணுகி, இந்த திட்டம் குறித்து அவர்களிடம் விளக்கி விண்ணப்பிக்கலாம்.
Read More : மாதம் ரூ.58,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு துறையில் வேலை..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?