பெரும்பாலான வீடுகளில் சாதாரணமாகக் காணப்படும் ஒரு பழக்கம், ஒரே குளியல் சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்துவது தான். குடும்ப உறுப்பினர்கள் என்பதாலேயே இதில் எந்த ஆபத்தும் இருக்காது என நினைப்பது தவறு. இந்த பழக்கத்தால், சில நேரங்களில் தவிர்க்க முடியாத சுகாதார பிரச்சனைகளை கூட நீங்கள் சந்திக்க நேரிடலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதாவது, ஒவ்வொருவரின் தோல் அமைப்பும் தனித்துவம் கொண்டது. ஒரே சோப்பை பயன்படுத்துவதால், ஒருவருக்கு ஏற்படும் தோல் தொற்றுகள் அல்லது சரும பிரச்சனைகள் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக சோப்பைப் பயன்படுத்திய பிறகு அதை முறையாக கழுவாமல் ஈரமாக வைத்துவிடும் பழக்கம் பலருக்கும் இருக்கும்.
இதனால், சோப்பின் மேல் கிருமிகள் சேர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் உருவாகும். அதேபோல், தோலில் ஏற்கனவே காயங்கள், அலர்ஜி போன்ற பிரச்சனைகள் இருப்பவரின் சோப்பை மற்றவர்கள் நேரடியாக பயன்படுத்தினால், உங்களுக்கும் அந்த தொற்று பரவ வாய்ப்புள்ளது.
குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் அல்லது குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படக் கூடும். ஒரே சோப்பை பலர் பகிர்ந்து பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், குறைந்தபட்சமாக அந்த சோப்பை நன்கு கழுவி உலர வைத்து பின் பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால், திரவ வடிவிலான சோப்புகளை பயன்படுத்தலாம். இவை பாட்டில்களில் விற்கப்படுகிறது. இதை பயன்படுத்துவதால், தொற்று பரவுவதற்கான வாய்ப்பு மிக குறைவு தான்.
எனவே, சரியான முறையில் குளிப்பது, சோப்பை சீராக தேய்த்து முழுமையாக கழுவுவது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குடும்ப உறவுகள் இருந்தாலும், தனிநபர் சுகாதாரம் என்பது கவனிக்க வேண்டிய விஷயமே என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.