Post Office Schemes | தற்போதைய காலகட்டத்தில் சேமிப்பு மிகவும் அவசியம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். முன்பெல்லாம், சம்பளம் வந்தவுடன் செலவுகளைச் செய்துவிட்டு பின் எதாவது மிச்சமிருந்தால் சேமிப்பது என்பது வழக்கம். ஆனால் இப்போது, முதலில் சேமிப்புக்கு பணத்தை ஒதுக்கிட்டு, பிறகு தான் மற்ற செலவுகளில் கவனம் செலுத்துகிறோம்.
மக்கள் தங்களது பணத்தை பாதுகாப்பாகவும், நம்பகமான வருமானத்துடனும் சேர்த்து வைக்கக்கூடிய சேமிப்புத் திட்டங்களை நாடத் தொடங்கியுள்ளனர். அதில் முக்கிய இடம் வகிக்கிறது தபால் அலுவலகத்தின் தொடர் வைப்புத் திட்டம் (Recurring Deposit – RD). பங்குச் சந்தை, முதலீடுகள், எஃப்.டி. போன்றவற்றில் சில ஆபத்துகள் இருக்கக்கூடிய நேரத்தில், அரசுத் துறையின் தபால் அலுவலகம் வழங்கும் தொடர் வைப்புத் திட்டம், மிகவும் பாதுகாப்பானதாகவும், நிதிநிலை மாறாமல் இருப்பதாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்றுள்ளது.
இத்திட்டத்தில் இணைந்தால் உங்களுக்கு 6.7% வட்டி கிடைக்கிறது. மேலும், இத்திட்டம் 5 ஆண்டுகளுகளுடன் முடிவடையும் நிலையில், மேலும் 5 ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒருவரால், மாதம் ரூ.5,000 சேமிக்க முடிகிறது என எடுத்துக்கொள்வோம். 5 ஆண்டுகளில், அவருடைய மொத்த முதலீடு ரூ.3,00,000 லட்சமாக இருக்கும். அதற்கான வட்டி ரூ.56,830 ஆகவும், மொத்தமாக உங்களுக்கு ரூ.3,56,830 கிடைக்கும்.
இத்திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யும் பட்சத்தில் உங்கள் முதலீடு ரூ.6 லட்சமாக இருக்கும். வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு ரூ.8.5 லட்சம் கிடைக்கும். சராசரி முதலீடுகளுக்குப் பிறகு, ஒரே ஆண்டில் 50% வரை கடனாக பெற முடியும். ஆனால், கடனுக்கு 8.5% வட்டி செலுத்த வேண்டும்.
நல்ல சேமிப்புத் திட்டங்களைத் தெரிந்து கொண்டு, ஒவ்வொரு மாதமும் சிறிது தொகையையாவது ஒதுக்குவதன் மூலம், எதிர்கால நிதி பிரச்சனைகளை தவிர்க்கலாம். இதுபோன்ற அரசு ஆதரவு கொண்ட திட்டங்கள், உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, வருமானத்தையும் உருவாக்கும் சிறந்த வழிகளாக உள்ளன.