தமிழ்நாட்டில் புதிய வாகனங்களை பதிவு செய்யும் போது, சிலர் ‘பேன்சி நம்பர்கள்’ மீது ஆசைப்படுவார்கள். முன்னதாக, இந்த எண்கள் பெற போக்குவரத்துத் துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. ஒப்புதல் கிடைத்த பிறகு ஆன்லைன் மூலம் ரூ.40,000 வரை கட்டணமாக செலுத்தி தான் அந்த எண்களை பெற முடிந்தது.
ஆனால் தற்போது, கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து முறைப்பாடுகளை கவனித்து, தமிழ்நாடு அரசு இ-ஏலம் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய முறையில், பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்த வாகன எண்களை www.parivahan.gov.in இணையதளத்தின் மூலம் நேரடியாக தேர்வு செய்ய முடியும்.
தனிப்பட்ட பயனர் கணக்குடன் உள்நுழைந்து, தங்கள் RTO இடத்தைத் தேர்வு செய்து, ‘சூப்பர் பேன்சி’, ‘செமி பேன்சி’ மற்றும் ‘ரன்னிங் நம்பர்’ என வகைப்படுத்தப்பட்ட விருப்ப எண்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து ஏலத்தில் பங்கேற்க முடியும்.
இ-ஏலம், குறிப்பிட்ட தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு எண்ணுக்கும் அரசு நிர்ணயிக்கும் அடிப்படை விலை ரூ.2,000 முதல் ரூ.2 லட்சம் வரை இருக்கும். ஏலத்தில் வெற்றி பெறுபவர் 48 மணி நேரத்திற்குள் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும், அரசு நுழைவு கட்டணமாக ரூ.1,000 இருந்த நிலையில், தற்போது ரூ.2,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏலத்தின் அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படும். அன்றே வாகன டீலர்களிடம் எண் விவரங்களை வழங்கி பதிவு செய்ய வேண்டும். தவறினால், ஆன்லைன் அமைப்பு தானாகவே ஒரு இயல்பான எண்ணை ஒதுக்கும். கேரளாவில் இதே முறையில் கடந்த ஏப்ரலில் ‘KL-07-DG-007’ என்ற நம்பர் ரூ.45 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும், இந்த முறையில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.