தமிழ்நாடு முழுவதும் சுமார் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில், வெளிநபர்கள் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற தொடர் புகார்கள் எழுந்து வந்தன.
இந்நிலையில், தேவையின்றி வெளி நபர்கள் ரேஷன் கடைகளில் இருந்தால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று திருப்பூர் மாவட்ட கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடையாள அட்டை அணியாததால் குழப்பம் :
தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுவதும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 7 கோடி பயனாளிகள் அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெற்று வருகின்றனர். சமீப காலமாக, ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அடையாள அட்டை அணிவதில்லை என்றும், கடைகளுக்கு சம்மந்தமில்லாத வெளி நபர்கள் விற்பனை மற்றும் பணிகளில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதனால், யார் உண்மையான ஊழியர் என்பதைக் கண்டறிய முடியாத நிலை நிலவியது.
வெளி நபர்களை கைது செய்ய உத்தரவு :
இதுதொடர்பாக, திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த சரவணன், முதல்வரின் முகவரி பிரிவில் புகார் அளித்திருந்தார். ஏற்கனவே, மாநில கூட்டுறவுத் துறை தலைமைச் செயலாளர், ரேஷன் கடைகளில் சம்மந்தப்பட்ட பணியாளர்களைத் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது என்றும், அவ்வாறு இருந்தால், காவல்துறை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் தெரிவித்து, கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவைத் திருப்பூர் மாவட்டத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரிப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இதற்குப் பதிலளிக்கும் விதமாகத் திருப்பூர் மாவட்டக் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் எம். தேவி சரவணனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், “கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து ரேஷன் கடைகளிலும் வெளி நபர்கள் அனுமதிக்கக்கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியின்போது அடையாள அட்டை அவசியம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.











