தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 37). இவர், மனைவி உஷா (35). இவர்களுக்கு ரூபா (10), பாவ்யாஸ்ரீ (9) ஆகிய இரண்டு மகள்கள். இந்நிலையில், அறிவழகன் தன்னுடைய மனைவி, 2 மகள்கள் மற்றும் தங்கையின் மகள் தேஜா ஸ்ரீ ஆகியோருடன் ஒரே பைக்கில் பனங்காடு பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
மாதாக்கோட்டை பைபாஸ் மேம்பாலம் அருகே சென்றபோது, கேரளாவில் இருந்து நாகூர் தர்காவுக்கு சென்று கொண்டிருந்த பக்தர்களின் கார், அறிவழகன் பைக் மீது அதி வேகமாக மோதியது. இந்த சம்பவத்தில் பைக்கில் சென்ற 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
மேலும், இச்சம்பவத்தில் அறிவழகன் மற்றும் அவரது மகள் பாவ்யா ஸ்ரீ மற்றும் தங்கையின் மகள் தேஜா ஸ்ரீ ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அறிவழகனின் மனைவி உஷா, மகள் ரூபா ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், போராடிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார், உஷா மற்றும் ரூபா ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் இறந்த 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : பேத்தியிடம் சில்மிஷம்..!! மாமனார் மீது பரபரப்பு புகார் கொடுத்த மருமகள்..!! கடைசியில் நடந்த செம ட்விஸ்ட்..!!