சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளரிவெள்ளி அருகே கஞ்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னக்கவுண்டர். இவரது மனைவி சின்னபொண்ணு (வயது 70). தனது கணவர் இறந்து விட்ட நிலையில், மூதாட்டி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி இரவு, மூதாட்டி வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.
அப்போது, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர், மூதாட்டியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து அவர் அணிந்திருந்த தங்க தோடுகளை பறித்துச் சென்றார். இதையடுத்து, மூதாட்டி பூலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மூதாட்டியை தாக்கி நகையை பறித்துச் சென்றது அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் சரவணன் (வயது 30) என்பது தெரியவந்தது. இவர், ஊரில் பலரிடம் கடன் பெற்றதும், அந்த கடனை திரும்ப செலுத்துவதற்காக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, சரவணனை கைது செய்த போலீசார், இதேபோல் வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Read More : புற்றுநோயாளிகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் கொரோனா தடுப்பூசிகள்..!! ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவுகள்..!!












