பெட்ரோல் விலை உயர்வு, சுற்றுச்சூழலைக் காக்கும் அக்கறை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு போன்ற காரணங்களால் தற்போது மின்சார வாகனங்களின் (இ-பைக்) பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் அலுவலக பயணம் செய்வோர் மற்றும் டெலிவரி பணிகளில் ஈடுபடுவோர் மத்தியில் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. தமிழக அரசு வழங்கும் மானியங்கள், சாலை வரிகளில் சலுகைகள் போன்ற ஊக்குவிப்புகளும் இ-பைக்குகளின் விற்பனையை தூண்டியுள்ளது.
மாதந்தோறும் பெட்ரோலுக்கு செலவாகும் ஆயிரக்கணக்கான ரூபாயுடன் ஒப்பிடுகையில், இ-பைக்குகளின் சார்ஜிங் செலவு மிகக் குறைவாக இருப்பதால், நடுத்தர வர்க்கத்தினரிடையே இந்த வாகனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனாலும், நீண்ட தூரப் பயணங்களுக்கு இன்றும் பெட்ரோல் வாகனங்களையே அதிகம் நம்பும் நிலை உள்ளது.
கிராமப்புறங்களில் சார்ஜிங் நிலையங்களின் பற்றாக்குறையும், பெரிய ஷாப்பிங் மால்கள், மெட்ரோ நிலையங்கள் போன்ற இடங்களில் மட்டுமே இப்போதைக்கு மெதுவாக சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாலும், இ-பைக்குகளின் பயன்பாடு நகரங்களை விட்டு விலகி செல்ல இன்னும் சற்றுத் தாமதமாகிறது.
இருப்பினும், ஊட்டி போன்ற மலைப் பிரதேசங்களிலும் சார்ஜிங் வசதிகள் கொண்டு வரப்படுவதால், அடுத்த சில வருடங்களில் இ-பைக்குகள் பெட்ரோல் வாகனங்களுக்குச் சிறந்த மாற்றாக வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இ-பைக்குகள் குறித்துக் கடலூரில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.
கடலூர் அண்ணா நகரில் வசித்து வரும் இனியவன் சேது என்பவர், தனியார் ஹோட்டலில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டில் ஒரு பெட்ரோல் பைக்கோடு இரண்டு மின்சார பைக்குகளையும் சேர்த்து மொத்தம் 3 வாகனங்களை வைத்திருந்தார்.
சம்பவத்தன்று இரவு, இனியவன் சேது தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த 3 பைக்குகளில், ஒரு இ-பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். ஆனால், சிறிது நேரத்திலேயே, சார்ஜ் செய்யப்பட்டிருந்த அந்த இ-பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற இரண்டு பைக்குகளுக்கும் வேகமாகப் பரவியதில், 3 வாகனங்களும் முற்றிலுமாக எரிந்து நாசமாயின. இதைத் தவிர இரண்டு சைக்கிள்கள் மற்றும் மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்தன.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இனியவன் சேது, உடனடியாக கடலூர் புதுநகர் போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சார்ஜ் போட்டிருந்த இ-பைக் வெடித்ததில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தது.











