தமிழ்நாட்டில் சுமார் 590 சார் பதிவாளர் அலுவலகங்கள் (Sub-Registrar Offices) சொத்துப் பதிவு, திருமணப் பதிவு, உயில் மற்றும் கடன் ஆவணப் பதிவுகள் போன்ற பல்வேறு சட்டப்பூர்வ ஆவணப் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றன. வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர் கிரைய பத்திரப்பதிவுக்காகவும், மற்ற சேவைகளுக்காகவும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்லும் நிலையில், குறிப்பாக முகூர்த்த நாட்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
பத்திரப்பதிவு சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு சார்பில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பதிவுத்துறை அலுவலகங்கள் முழுவதும் இப்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த சீர்திருத்தத்தின் உச்சமாக, மக்கள் இருந்த இடத்திலேயே பத்திரப்பதிவுச் சேவைகளைப் பெறும் வகையில், ‘ஸ்டார் 3.0’ என்ற புதிய திட்டம் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்காக வர உள்ளது.
வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு :
‘ஸ்டார் 3.0’ திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இனி சொத்துப் பரிவர்த்தனைகள், அதாவது புதிய வீடுகள் அல்லது மனைப் பிரிவுகளை வாங்குவது, விற்பது போன்றவற்றுக்கு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தேவைப்படும் சாதனம் : இந்த வசதியைப் பயன்படுத்த, சுமார் ரூ.1,500 மதிப்புள்ள விரல் ரேகைப் பதிவு செய்யும் இயந்திரம் மட்டுமே தேவை. இது கடைகளில் கிடைக்கிறது.
பதிவு செய்யும் முறை : பத்திரப்பதிவு இணையதளத்திற்கு சென்று, உங்கள் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP எண்ணை குறிப்பிட்டவுடன், விரல் ரேகைப் பதிவு கேட்கும்.
முடிவு : இந்த சில வழிமுறைகளைப் பின்பற்றினால், அனைத்துப் பணிகளையும் இருந்த இடத்திலேயே செய்து முடிக்கலாம். இந்த முறையில் பத்திரப்பதிவு செய்ய அதிகபட்சமாக 10 நிமிடங்கள் கூட ஆகாது என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் உடனே கைகளில் கிடைத்துவிடும்.
விவரங்களை அறிய புதிய செயலி :
இந்த ‘ஸ்டார் 3.0’ திட்டத்தின் கீழ், பத்திரப்பதிவு சார்ந்த விவரங்களை எளிதில் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக ஒரு புதிய செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
செயலியின் பயன்கள் : இந்த செயலி மூலம், ஒரு சொத்தின் வழிகாட்டி மதிப்பு எவ்வளவு, அதில் வில்லங்கம் இருக்கிறதா, சொத்து எந்த எல்லையில் அமைந்துள்ளது, பத்திரங்களின் தற்போதைய நிலை என்ன போன்ற பல்வேறு விவரங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
திருமண சான்றிதழ் : இனி, திருமண சான்றிதழைப் பெற சார் பதிவாளர் அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கும் சூழல் தவிர்க்கப்பட்டு, இந்தச் செயலி மூலமாக விண்ணப்பித்து உடனடியாக பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 77 லட்சம் பேர் நீக்கம்..? அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!!











