2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரப் பணிகள் (SIR – Special Intensive Revision) தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளின் முடிவில், தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த SIR பணியில் ஈடுபட்டுள்ள பி.எல்.ஓக்கள் (Booth Level Officers), இந்தப் பணிகளைச் சரியான முறையில் செயல்படுத்த முடியாமல் சிரமத்தில் தவித்து வருவதாக கூறப்படுகிறது. பழைய வாக்காளர்களின் விவரங்கள், குறிப்பாக 2002ஆம் ஆண்டில் வாக்களித்த விவரங்களைப் பெற முடியாமல் வாக்காளர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த தரவுகளை சரிபார்க்கும் பி.எல்.ஓக்களின் பணிச்சுமை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள இந்த 77 லட்சம் வாக்காளர்களில், இறந்தவர்கள், வேறு இடத்திற்கு மாறிச் சென்றவர்கள், மற்றும் இரட்டைப் பதிவு கொண்டவர்கள் ஆகியோர் அடங்குவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனினும், நீக்கப்படும் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், பீகார் மாநிலத்தில் மட்டும் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தேசிய அளவில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில், தமிழகத்தில் நடைபெறும் SIR பணிகள், வாக்காளர்கள் நீக்கப்படும் எண்ணிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு போன்றவை அடுத்தடுத்து பெரும் பரபரப்பை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.











