ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கும் மிகப் பெரிய உதவியான ரேஷன் கார்டுகளில் நடக்கும் மோசடிகளை தடுக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. போலி கார்டுகள் மற்றும் தகுதியற்ற பயனாளிகளை நீக்கும் பணியைத் துரிதப்படுத்தியுள்ள நிலையில், கேஒய்சி (KYC) அப்டேட் செய்யாதவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தகுதியின் அடிப்படையில் மட்டுமே ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மாநில அரசுகள் தீவிர சரிபார்ப்பில் ஈடுபட்டுள்ளன. பலர் குடும்ப வருமானத்தைக் குறைவாகக் காட்டியும், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தியும் 2 அல்லது 3 ரேஷன் கார்டுகளை வாங்கி வைத்திருப்பதும், அவற்றை ரேஷன் வாங்குவதற்குப் பயன்படுத்தாமல் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகளை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக, இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் மட்டும் கடந்த 6ஆண்டுகளில் 6.34 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டில் மட்டும் 69,102 கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன.
கேஒய்சி அப்டேட்டுக்கான காலக்கெடு :
மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கேஒய்சி சரிபார்ப்பை கட்டாயம் முடிக்க அறிவுறுத்தியுள்ளது. இந்த விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாதவர்கள் மற்றும் போலியான, இரட்டை ரேஷன் கார்டுகளை வைத்திருந்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் 2025 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கேஒய்சி அப்டேட் செய்யாவிட்டால், அவர்களின் கார்டுகள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசின் மற்றொரு விதிமுறைப்படி, 6 மாதங்களுக்கு மேல் மானிய விலையில் உணவு தானியங்களை வாங்காதவர்களின் ரேஷன் கார்டுகளும் நீக்கப்படும். இதற்காக, அடுத்த 3 மாதங்களுக்குள் வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு மற்றும் கேஒய்சி மூலம் தகுதியானவர்கள் கண்டறியப்படுவார்கள் என்று அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த நடவடிக்கைகள் பொது விநியோகத் திட்டத்தில் உள்ள முறைகேடுகளை முழுவதுமாகத் தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளன.











