தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO), பிஎஃப் கணக்குகளின் (UAN) யுஏஎன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை இனி எந்த காரணத்திற்காகவும் நீட்டிக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அக்டோபர் 31, 2025 உடன் காலக்கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், இதுகுறித்த புதிய சுற்றறிக்கையை இபிஎஃப்ஓ டிசம்பர் 1, 2025 அன்று வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய கெடுபிடி குறிப்பிட்ட தொழில்துறையினர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நிறுவனங்களுக்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாருக்கெல்லாம் கூடுதல் பாதிப்பு?
ஆரம்பத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்கள் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது அவர்களுக்கும் இந்த விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநில நிறுவனங்கள்: அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிஸோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய 7 மாநிலங்கள்.
தொழிலாளர் சார்ந்த துறைகள்: பீடித் தொழில், கட்டட கட்டுமானம், மற்றும் தேயிலை, காபி, ரப்பர் போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் சார்ந்த தொழில்கள்.
இந்தப் பிரிவுகளில் பணியாற்றும் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்களின் நலன் கருதியே இவ்வளவு காலம் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
ஏன் இந்த கெடுபிடி?
ஜூன் 1, 2021 முதல் இபிஎஃப்ஓ, மின்னணுச் சலான் (ECR – Electronic Challan-cum-Return) தாக்கல் செய்ய ஆதார் சரிபார்ப்பை கட்டாயமாக்கியுள்ளது. அதாவது, ஆதார் இணைக்கப்படாத ஊழியர்களின் பிஎஃப் சந்தா தொகையை நிறுவனங்களால் செலுத்த முடியாது.
பிஎஃப் கணக்குகளில் ஏற்படும் தவறுகளைக் குறைக்கவும், போலி கணக்குகளைத் தடுக்கவும், மற்றும் கிளைம் செட்டில்மென்ட்டை எளிதாக்கவும் மத்திய அரசு இந்தப் புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.
இனி என்ன நடக்கும்?
நவம்பர் 2025 மாதத்திற்கான சம்பளப் பட்டியலைத் தாக்கல் செய்யும்போது, ஆதார் இணைக்கப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே இசிஆர் தாக்கல் செய்ய முடியும். ஆதார் இணைக்கப்படாத பட்சத்தில், அந்த ஊழியருக்கான பிஎஃப் சந்தாவை நிறுவனத்தால் டெபாசிட் செய்ய முடியாது. இது சம்பந்தப்பட்ட ஊழியர்களின் எதிர்கால சேமிப்பைப் பாதிக்கும்.
எனவே, பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் யுஏஎன் கணக்குடன் ஆதார் எண் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உடனடியாகச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், நிறுவனங்களும் கடைசி நேர சிக்கல்களைத் தவிர்க்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இபிஎஃப்ஓ அறிவுறுத்தியுள்ளது.











