இன்றைய நவீன சமையலறைகளில் நான்-ஸ்டிக் பாத்திரங்களைப் (Non-Stick Pan) பயன்படுத்துவது மிக சாதாரணமாகிவிட்டது. எனினும், இவை உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. குறிப்பாக, அதிகம் சூடாக்கப்பட்ட அல்லது தேய்ந்த நான்-ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவது நீண்டகால உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இந்தக் கேடுகளைத் தற்காத்துக் கொள்ள, நாம் நான்-ஸ்டிக் பாத்திரங்களில் செய்யக்கூடாத 3 முக்கியமான விஷயங்களை இங்கே காணலாம்.
காலியான பாத்திரத்தை சூடுபடுத்துதல் கூடாது :
சிலர் சமைக்க தொடங்கும் முன், நான்-ஸ்டிக் பாத்திரம் சூடான பிறகு தோசை, சப்பாத்தி அல்லது பிற பொருட்களைப் போட்டுக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள். ஆனால், வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்துச் சூடாக்கும்போது, அதன் வெப்பநிலை மிக அதிகமாக உயர்ந்து, பாத்திரத்தின் மேல் பூச்சைப் (Coating) உடைத்துவிடும். இதனால்தான் பாத்திரத்திலிருந்து புகை வர ஆரம்பிக்கிறது. இந்தப் புகை ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும்.
பழைய/நாள்பட்ட பாத்திரங்களை தவிர்த்தல் :
நாள்பட்ட நான்-ஸ்டிக் பாத்திரங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவற்றிலிருந்து PFOA எனப்படும் நச்சு வேதிப்பொருள் வெளியேற வாய்ப்புள்ளது. இது கல்லீரல், நோய் எதிர்ப்புத் திறன் குறைதல், தைராய்டு பிரச்சனைகள் போன்ற தீவிர உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஸ்கிராட்ச் விழுந்த பாத்திரத்தை பயன்படுத்தக் கூடாது :
தோசை, சப்பாத்தி அல்லது காய்கறிகளைத் திருப்பிப் போடும்போது உலோகக் கரண்டிகளைப் பயன்படுத்தும் நேரத்தில், பாத்திரத்தின் பூச்சில் (Coating) ஸ்க்ராட்ச் விழும். இவ்வாறு சேதமடைந்த பாத்திரங்களில் சமைக்கும்போது, உடைந்த கோட்டிங்கின் துகள்கள் உணவில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. இது உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் மிக முக்கியமான விஷயம் என்பதால், ஸ்கிராட்ச் விழுந்த பாத்திரங்களை உடனடியாக அப்புறப்படுத்துவது அவசியம்.
பாதுகாப்பான மாற்றுகள் :
நான்-ஸ்டிக் பாத்திரங்களின் பூச்சில் PFAS எனப்படும் ரசாயனங்கள் அதிகம் சேர்க்கப்படுகின்றன. இவை உடலில் சேர்வதால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, ஆரோக்கியமான சமையலுக்கு இரும்புப் பாத்திரங்கள், ஸ்டைன்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள், அல்லது செராமிக் பூசப்பட்ட பாத்திரங்கள் போன்றவற்றை மாற்று வழிகளாகப் பயன்படுத்தலாம். இவை வெப்பம் அதிகரிப்பதை தாங்குவதுடன், ரசாயனக் கலப்புகளையும் தவிர்க்க உதவும்.
Read More : டிட்வா புயல் பாதிப்பு..!! விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பீடு..? தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!















