நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தமிழக அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை தன்பக்கம் ஈர்க்கும் வியூகத்தை தீவிரப்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கியத் தலைவர்கள் தவெக-வுக்குத் தாவ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெகவுக்கு தாவும் திமுக அமைச்சர்கள் :
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியப் பிரமுகரான ஆதவ் அர்ஜுனா, ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்தபோது, “அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்ல; திமுகவில் இருக்கும் இரண்டு சிட்டிங் அமைச்சர்கள் எங்கள் கட்சிப் பக்கம் வருவார்கள். மக்கள் சக்தி எந்தப் பக்கம் இருக்கிறதோ, அங்கே அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் வருவார்கள். பிப்ரவரி மாதத்தில் இந்த இணைப்பு நடக்கும், நீங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள்” என்று பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
சமீபத்தில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தவெக-வில் இணைந்தது, அந்த வரிசையில் விழுந்த முதல் விக்கெட்டாக பார்க்கப்படுகிறது. ஆனால், இது ஒரு ‘டீசர்’ மட்டும்தான் என்றும், ‘மெயின் பிக்சர்’ இனிமேல்தான் என்றும் கூறி வருகின்றனர்.
அதாவது, கொங்கு மண்டலத்தில் இருந்து ஒரு தலைவர், சென்னையில் ருந்து ஒருவர், டெல்டா பகுதியில் இருந்து இருவர் என, மேலும் 4 முக்கியத் தலைவர்கள் விரைவில் தவெக-வுக்குத் தாவப் போவதாகவும், இவர்களிடம் செங்கோட்டையனே தூதுவராகப் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் முக்கிய தலைவர்களை செங்கோட்டையன் ஒவ்வொருவராக தவெக-வுக்குக் கொண்டு வரப்போகிறார் என்றும் கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே இத்தகைய வலுவான தலைவர்கள் இணைவது, தவெக ஒரு தீவிரப் போட்டியாளராக உருவெடுப்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. பல தலைவர்கள், தவெக ஒரு புதிய அரசியல் களத்தை வழங்குவதாகவும், தங்கள் அனுபவத்திற்குப் புதிய அங்கீகாரம் கிடைக்கும் என்றும் கருதுவதால், தலைவர்களின் தாவல் போக்கு மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். அடுத்த சில நாட்களில் அரசியல் அரங்கில் சுடசுட பல திருப்பங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக தெரிகிறது.











