அரசு வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் குறுக்கு வழிகளை நம்பி இடைத்தரகர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாறுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரிப் பெண் ஒருவரிடம் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ. 25 லட்சம் பணம், 5 பவுன் நகை மோசடி :
நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் கீழூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பட்டதாரிப் பெண் ஒருவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்தாலும், அரசு வேலைக்குத் தீவிரமாக முயற்சி செய்து வந்துள்ளார். இந்தச் சூழலில், அப்பெண்ணின் தந்தைக்கு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பிரபாகரன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
பிரபாகரன், தான் ரயில்வேயில் பணியாற்றுவதாகவும், தனக்கு உயர் அதிகாரிகள் பலரைத் தெரியும் என்றும் கூறி, “ரூ. 25 லட்சம் கொடுத்தால் உங்கள் மகளுக்கு ரயில்வேயில் நிரந்தர வேலை வாங்கித் தருகிறேன்” என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். மகளுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், அப்பெண்ணின் தந்தை பிரபாகரனின் வங்கிக் கணக்கிற்குப் பல தவணைகளாக ரூ. 25 லட்சத்தை அனுப்பியுள்ளார். சிறிது காலத்திற்குப் பிறகு, பிரபாகரன் மீண்டும் பணம் தேவைப்படுவதாகக் கூறி, அப்பெண்ணின் தந்தையிடமிருந்து 5 பவுன் நகையையும் பெற்றுள்ளார்.
இவ்வாறு பணம் மற்றும் நகை கொடுத்து ஒரு ஆண்டு கடந்த பின்னரும் பிரபாகரன் வேலை வாங்கி கொடுக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்ணின் தந்தை, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் புகார் அளித்தார்.
செல்போனில் சிக்கிய ஆபாசப் படங்கள் :
மோசடி குறித்து விசாரிக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஆரல்வாய்மொழி போலீஸார் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் தனிப்படை அமைத்து பிரபாகரனைத் தேடி வந்தனர். இந்த நிலையில், அரக்கோணத்தில் பதுங்கி இருந்த பிரபாகரனைக் காவல்துறையினர் கைது செய்து ஆரல்வாய்மொழிக்கு அழைத்து வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அரக்கோணம் பகுதியில் வழிதெரியாமல் சுற்றித் திரிந்த பட்டதாரிப் பெண்ணின் சகோதரரை பிரபாகரன் மீட்டுக் குடும்பத்தினரிடம் ஒப்படைத்ததன் மூலமே இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரியவந்தது.
இதையடுத்து, பிரபாகரனின் செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் பல பெண்களின் ஆபாசப் படங்களும் வீடியோக்களும் இருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இவர் வேலை வாங்கித் தருவதாகப் பல இளம் பெண்களை வரவழைத்து, அவர்களை ஏமாற்றி அவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்திருக்கலாம் என்று போலீஸாருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த மோசடி மற்றும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பட்டதாரிப் பெண்ணிடம் ரூ. 25 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : வங்கிக் கணக்கை மூடப் போகிறீர்களா..? கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமல் தப்பிக்க சூப்பர் டிப்ஸ்..!!











