இன்றைய காலத்தில் நம்மில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துகிறோம். சில சமயம் தேவையில்லாத பல கணக்குகளை வைத்திருப்பதால், பல்வேறு கட்டணங்களைச் செலுத்த வேண்டிய சுமை ஏற்படுகிறது. இதனால், வங்கிக் கணக்கை மூடிவிடலாம் என்று நினைப்பவர்கள், கூடுதல் கட்டணங்கள் மற்றும் நிதிச் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, சில முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம்.
குறைந்தபட்ச இருப்புத் தொகை : ஒரு வங்கிக் கணக்கை மூடும்போது, வாடிக்கையாளர்கள் வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச இருப்புத் தொகையை (Minimum Balance) அக்கவுண்ட்டில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் கணக்கை மூடும்போது இந்தத் தொகை இல்லாவிட்டால், அதற்கான அபராதக் கட்டணத்தை வங்கி உங்கள் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.
அதேபோல், வங்கிக் கணக்கை மூடுவதற்கு முன்பு, அந்தக் கணக்குடன் தொடர்புடைய ஏதேனும் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு தொடர்பான நிலுவைக் கட்டணங்கள் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். சில வங்கிகள், கணக்கை மூடும்போது இந்தக் கட்டணங்களையும் வசூலிக்கின்றன. எனவே, அனைத்துக் கடன்கள் மற்றும் நிலுவைகளை முழுவதுமாக அடைத்துவிட்டு, அதற்கான எழுத்துப்பூர்வத் தகவலை வங்கியிடமிருந்து பெறுவது நல்லது.
ஆட்டோ-டெபிட் வசதியை ரத்து செய்தல் : உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மாதாந்திர சந்தாக்கள், தவணைகள் அல்லது வேறு ஏதேனும் கட்டணங்கள் தானாகப் பணம் எடுக்கும் (Auto-Debit) வசதியை நீங்கள் ஆக்டிவேட் செய்திருந்தால், கணக்கை மூடுவதற்கு முன் அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், ECS (Electronic Clearing Service) வசதிகளையும் நீக்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் கணக்கு மூடப்பட்ட பிறகும் பணம் பிடித்தம் செய்ய முயற்சிக்கும்போது, அது உங்களுக்குச் சிரமங்களையும் கூடுதல் கட்டணங்களையும் ஏற்படுத்தலாம்.
நெகட்டிவ் பேலன்ஸை தவிர்த்தல் : வங்கிக் கணக்கை மூடுவதற்கு முன், அந்தக் கணக்கில் நெகட்டிவ் பேலன்ஸ் (Negative Balance) அதாவது, உங்களுக்கு வங்கிக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி ஏதேனும் இருந்தால், அதைச் செலுத்திச் சரிசெய்வது அவசியம். மேலும், கணக்கை மூடுவதற்கு முன்னர், உங்களிடம் உள்ள முழுத் தொகையையும் பணமாக எடுத்துக்கொள்வது அல்லது வேறு ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிடுவது பாதுகாப்பானது.
வங்கிக் கணக்கை மூடுவது என்பது சாதாரணமாகத் தோன்றினாலும், மேலே கூறப்பட்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், தேவையற்ற கட்டணங்களைத் தவிர்த்து, உங்கள் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்று நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகிறார்கள்.













