இந்தியாவில் அவசர நிதித் தேவைகளுக்காக தங்கத்தை அடமானம் வைப்பது போல, இனி மக்கள் தங்கள் வசம் உள்ள வெள்ளியை அடமானமாக வைத்து விரைவாக கடன் பெறும் வசதியை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிமுகப்படுத்தவுள்ளது. இது குறித்த வழிகாட்டுதல்களை RBI வெளியிட்டுள்ள நிலையில், இந்தக் கடன் திட்டம் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கு ஈடான கடன்கள் :
RBI தனது கடன் விதிகளை அதிகாரப்பூர்வமாக திருத்தியுள்ளது. இதன் மூலம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இனி தங்கத்துடன் சேர்த்து, வெள்ளி ஆபரணங்கள் மற்றும் நாணயங்களுக்கு கடன் வழங்க அனுமதிக்கப்படுகின்றன. அடுத்த நிதியாண்டு முதல், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சிறு நிதி வங்கிகள் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாட்டிலுள்ள நிதி நிறுவனங்கள் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையைப் பெற முடியும். குறிப்பாக, கிராமப்புறங்களில் வெள்ளிச் சொத்துகள் பரவலாக காணப்படும் நிலையில், இந்த முடிவு கடன் அணுகலை மேலும் எளிமையாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றும் நோக்கம் கொண்டது.
புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒரு கடனாளியால் அதிகபட்சமாக 10 கிலோ வெள்ளியை அடமானமாக வைக்க முடியும். இது தற்போதுள்ள தங்க அடமான வரம்பை (1 கிலோ) விட மிக அதிகமாகும். மேலும், 500 கிராம் வரையிலான வெள்ளி நாணயங்களையும் அடமானமாக பயன்படுத்தலாம்.
கடனுக்கு தகுதியான வெள்ளியின் வடிவங்கள் :
அனைத்து வெள்ளி வடிவங்களும் கடனுக்கு ஏற்கப்படாது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி, வெள்ளிக் கட்டிகள் அல்லது பட்டைகள் (Silver Plates or Bars) கடன்களுக்கு ஏற்றவை அல்ல. அதேபோல, ETFகள் (Exchange Traded Funds) அல்லது மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற வெள்ளி அடிப்படையிலான முதலீடுகளும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்கள் போன்ற நேரடி வடிவிலான பொருட்கள் மட்டுமே அடமானமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
கடன் தொகை மற்றும் திரும்பச் செலுத்தும் விதிமுறைகள் :
கடனின் மதிப்பைப் பொறுத்து, கடன்-மதிப்பு விகிதம் மாறுபடும். உதாரணமாக, நீங்கள் ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளியை அடமானம் வைத்தால், அதன் மதிப்பில் 85 சதவீதம் வரை கடனாக பெறலாம். அதே சமயம், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வெள்ளிக்கு, LTV விகிதம் அதிகபட்சம் 75 சதவீதமாக கட்டுப்படுத்தப்படும்.
மேலும், நுகர்வோர் நலன் கருதி, கடனாளிகள் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தியவுடன், வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் அடமானமாக வைக்கப்பட்ட வெள்ளி அல்லது தங்கத்தை 7 வேலை நாட்களுக்குள் கட்டாயம் மீள ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் RBI எச்சரித்துள்ளது.
கடனாளி கடனைத் திருப்பி செலுத்த தவறினால், நிலுவைத் தொகையை மீட்பதற்காக அடமானமாக வைக்கப்பட்ட வெள்ளி அல்லது தங்கத்தை விற்பனை செய்யும் உரிமை வங்கிக்கு உண்டு. ஒட்டுமொத்தமாக, இந்த ‘வெள்ளிக் கடன்’ திட்டம், அவசரத் தேவைகளுக்காக தங்கள் மதிப்புமிக்க உலோக சொத்துக்களை பணமாக மாற்றிக்கொள்ளும் புதிய வாய்ப்பை இந்திய குடும்பங்களுக்கு ரிசர்வ் வங்கி திறந்துவிடுகிறது.
Read More : “இதை மட்டும் அன்புமணி செய்துவிட்டால் கட்சியில் இருந்தே விலகுகிறேன்”..!! சேலத்தில் சவால் விட்ட ஜி.கே.மணி..!!












