நமது உடலில் ஏற்படும் சாதாரண வலிகள் சில சமயங்களில் கடுமையான நோய்களின் ஆரம்ப எச்சரிக்கையாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, சிலருக்கு ஏற்படும் வயிற்றில் கனத்த உணர்வு, சோர்வு அல்லது வயிற்றுக்கும் இடுப்புக்கும் இடையில் ஏற்படும் சிறிய வலியை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால், வயிற்றின் வலது பக்கத்தில் ஏற்படும் தொடர்ச்சியான வலி, கல்லீரல் புற்றுநோயின் (Liver Cancer) ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்று டாக்டர். ஜெய் சோக்ஷி போன்ற நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எந்த இடத்தில் வலி ஏற்படும்..?
கல்லீரல் புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருக்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வயிற்றின் மேல்புற வலது பக்கம் (Upper Right Quadrant) வலியை உணர்வார்கள். இந்த வலி தொடர்ச்சியாகவோ அல்லது விட்டுவிட்டு அதிகமாவது போலவோ இருக்கலாம். சில சமயங்களில் இந்த வலி முதுகுப் பகுதிக்கோ அல்லது தோள்பட்டைக்கோ பரவவும் வாய்ப்புள்ளது.
கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகள் :
* வயிற்று வலி
* அடிக்கடி சோர்வாக உணர்வது
* முயற்சி இல்லாமல் உடல் எடை குறைதல்
* உணவு ஆசை குறைதல்
* மஞ்சள் காமாலை (சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல்)
* வயிற்றுப் பகுதியில் வீக்கம் அல்லது கனத்த உணர்வு
* அடிக்கடி வாந்தி வருவது போன்ற உணர்வு அல்லது வாந்தி எடுத்தல்.
நீண்டகாலமாக மது அருந்துதல், ஹெபடிடிஸ் B மற்றும் C வைரஸ் தொற்றுகள், கொழுப்பு கல்லீரல் பிரச்சனை (Fatty Liver), அதிக உடல் எடை மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவை கல்லீரல் புற்றுநோய்க்கான முக்கிய அபாய காரணிகளாகும். கல்லீரல் புற்றுநோய் ஒரு கடுமையான நோயாக இருந்தாலும், அதனைத் தடுக்கவும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் வழிகள் உள்ளன.
மது மற்றும் புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பது, சீரான மற்றும் சத்தான உணவு முறையைப் பின்பற்றுவது, ஹெபடிடிஸ் B தடுப்பூசி போட்டுக்கொள்வது மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கல்லீரல் பரிசோதனைகளைச் செய்துகொள்வது ஆகியவை முக்கியமான தடுப்பு வழிகளாகும். எனவே, வயிற்றின் வலது பக்கத்தில் தொடர்ச்சியான வலி அல்லது மேலே கூறப்பட்ட மற்ற அறிகுறிகள் இருந்தால், அதைச் சாதாரணமாக அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.














