தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சுமார் 6 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள சூழலில், அதுகுறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அவர் இந்த உத்தரவை போட்டுள்ளார்.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி தொடர்பான பிரச்சனைகளை நான் கவனித்துக் கொள்வேன். அதைப் பற்றி நிர்வாகிகள் யாரும் கவலைப்படத் தேவையில்லை. அதேபோல், கூட்டணி குறித்து எந்தவொரு கருத்தையும் யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார். அதிமுக நிர்வாகிகள் பூத் கமிட்டி பணிகளையும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளையும் கவனமாகச் செய்வதிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழலில், அதிமுகவும் பாஜகவும் மட்டுமே தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ளன. பாமக, தமாகா போன்ற கட்சிகள் கூட்டணியில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிகம் எதிர்பார்த்த தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற தவெகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில், அடுத்த முதல்வரை விஜய் தான் முடிவு செய்வார் என்றும், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது, அதிமுகவின் அழைப்பை விஜய் மறைமுகமாக நிராகரித்துவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Read More : இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!












