தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நேற்று முதல் (நவம்பர் 4) தொடங்கி, வீடு வீடாகச் சென்று படிவங்களை விநியோகிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஒருபுறம், இந்த சிறப்பு திருத்தப் பணிகளுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள போதிலும், களத்தில் தேர்தல் ஆணையத்தின் அலுவலர்களுடன் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்ட்களும் தீவிரமாக பணியாற்ற தொடங்கியுள்ளனர்.
இந்தச் சூழலில், சிறப்புத் திருத்தக் கணக்கெடுப்புப் படிவத்தில் தவறான அல்லது உண்மையல்லாத தகவல்களை அளிக்கும் வாக்காளர்களுக்கு, அதிகபட்சமாக ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இது குற்றமாகக் கருதப்படும் என்பதால், படிவத்தைப் பூர்த்தி செய்பவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் கையொப்பம்/விரல் ரேகை மூலம் உறுதிமொழி அளிக்க வேண்டும்.
வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடுதோறும் சென்று விநியோகிக்கும் இந்தப் படிவங்களில், வாக்காளரின் பிறந்த தேதி, ஆதார் எண், மொபைல் எண், பெற்றோர்/துணைவரின் விவரங்கள், தொகுதி எண், முகவரி உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் கோரப்பட்டுள்ளன. மேலும், வாக்குச்சாவடி அலுவலர்கள், இடம் மாறியவர், இறந்தவர், இரட்டைப் பதிவு உள்ளவர்கள் ஆகியோரை அடையாளம் காண்பதுடன், புதிய தகுதியுள்ள வாக்காளர்களின் விவரங்களையும் சேகரிக்க உள்ளனர். எந்த ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதற்காக, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெற, அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தபட்சம் மூன்று முறை செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பூத் ஏஜென்ட்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின், டிசம்பர் 9 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும், அதன் மீதான ஆட்சேபனைகளை ஜனவரி 8 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். மேலும், வாக்காளர்கள் ஆன்லைன் வழியாகவும் முன்பே நிரப்பப்பட்ட படிவங்களைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
Read More : அக்காள் கணவருடன் ரகசிய உறவு..!! திருமணமான 4 நாட்களில் மாப்பிள்ளையை விட்டு மாமாவுடன் ஓடிய கொழுந்தியாள்..!!












