கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு அருகே தொட்டபள்ளாப்புரா நகரில், ஒரு திருட்டுச் சம்பவத்தில் கொள்ளையர்கள் மிக எளிதாக காவல்துறையிடம் சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த செப்.16ஆம் தேதி, டிபி நாராயணப்பா படாவனே பகுதியில் வசிக்கும் ஒருவர், தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
பின்னர் வீட்டில் இருந்த சுமார் 115 கிராம் தங்க நகைகள், சில்வர் பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் பணம் என மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் திருடிச் சென்றனர். இதையடுத்து, ஊரில் இருந்து திரும்பிய வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், உடனடியாக தொட்டபள்ளாப்புரா காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, திருட்டுப் போன பொருட்களில் ஒரு ஆப்பிள் ‘ஏர்பட்ஸ்’ (Apple Airpods) இருந்ததும், அது இன்னும் ஆக்டிவேட் நிலையில் இருப்பதும் தெரியவந்தது. இதுவே திருடர்களை பிடிப்பதற்கான முக்கிய காரணமாக இருந்தது.
அந்த ஏர்பட்ஸின் சமீபத்திய லொகேஷனை (Location) கண்டுபிடித்தபோது, அது பெங்களூருவின் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை அருகே உள்ள கூட்லு கேட் பகுதியில் இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அங்கு இருந்த புருசோத்தம் (22), தர்ஷன் (20), சந்துரு (24) ஆகிய மூன்று இளைஞர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள்தான் வீட்டை உடைத்துத் திருடியதை ஒப்புக்கொண்டனர். ஆப்பிள் ஏர்பட்ஸின் துல்லியமான லொகேஷன் மூலம் புகார் அளித்த 6 மணி நேரத்திற்குள்ளேயே திருடர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து திருட்டுப் போன நகை, பணம் மற்றும் பிற பொருட்களை காவல்துறையினர் மீட்டனர்.
Read More : பெற்றோர்களே உஷார்!. இருமல் சிரப் குடித்ததால் சோகம்!. 8 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்..!!