எல்பிஜி (LPG) சிலிண்டர் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. இனி, நுகர்வோர் தங்களது சமையல் எரிவாயு நிறுவனத்தை அல்லது விநியோகஸ்தரை எளிதாக மாற்றிக்கொள்ளும் வசதி விரைவில் வரவுள்ளது. இதற்காக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் LPG Interoperability Framework) என்ற புதிய அமைப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், நீங்கள் தற்போது இண்டேன் எரிவாயு இணைப்பைப் பயன்படுத்துபவராக இருந்தால், எதிர்காலத்தில் பாரத் கேஸ் அல்லது HP கேஸுக்கு மாறுவதற்கு பழைய இணைப்பை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
நாடு முழுவதும் தற்போது 32 கோடிக்கும் அதிகமான எல்பிஜி இணைப்புகள் உள்ளன. ஆனால், இதற்கேற்ப நுகர்வோர் புகார்களும் அதிகரித்து வருகின்றன. வாரியத்தின் அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் விநியோகத்தில் தாமதம் மற்றும் சிலிண்டர் நிரப்புவதில் இடையூறு போன்ற சிக்கல்கள் காரணமாக 17 லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் பதிவாகின்றன.
இந்த சேவை இடையூறுகளை களையவும், சேவை வழங்குநரை தேர்வு செய்யும் உரிமையைப் பயனர்களுக்கு வழங்கவும் PNGRB இந்த திட்டத்தை கொண்டுவருகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான சிறந்த சேவையை வழங்கும் நிறுவனத்தை அல்லது டீலரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், உள்ளூர் டீலரிடம் சிலிண்டர் இல்லாவிட்டால், அருகிலுள்ள வேறு எந்த நிறுவனத்திடம் இருந்தும் அல்லது டீலரிடமிருந்தும் தற்காலிகமாக ரீஃபில்களை பெறும் வசதியும் நுகர்வோருக்கு கிடைக்கும். இது சப்ளையர்களிடையே போட்டியை உருவாக்கி, காத்திருப்பு நேரத்தை குறைத்து சேவையின் தரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த திட்டம் குறித்து PNGRB ஏற்கனவே பொதுமக்களின் கருத்துகளை கேட்டுள்ளது. நுகர்வோர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்கள் அக்டோபர் வரை தங்கள் கருத்துகளைச் சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு, வாரியம் இறுதி வழிகாட்டுதல்களை தயாரித்து, இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும் தேதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : சேலம் உருக்காலையில் வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.60,000 வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!