ஏற்காடு பகுதியில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே மோட்டுகாடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(36), இவரது மனைவி ராமாயி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வரும் நிலையில், வழக்கம்போல கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டு சேலத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். இரவு நேரத்தில் வீடுதிரும்பிய சிவக்குமார், வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகே ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த உறவினர்கள் சிவக்குமாரின் உடலை பார்த்து சாவில் மர்மம் இருப்பதாகவும், மனைவி சிவக்குமாரியிடம் விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மனைவியின் போன் அழைப்புகளை ஆராய்ந்து மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. ராமாயி கடைசியாக போனில் பேசியது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதில் ஏற்காடு மதுராயன்காடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததும் மேலும், கணவர் சிவக்குமாரை திட்டமிட்டு தலையில் இரும்பு ராடால் தாக்கி கொலை செய்ததும் தெரிய வந்தது.
மேலும் சிவக்குமார் கொலையான இடத்தில் தலையில் தாக்கியதில் மூளை சிதறி கிடந்துள்ளது. ஆனால், மற்ற இடங்களில் எந்த காயமும் ஏற்படவில்லை, இதனால் கள்ளக்காதல் விவகாரத்தில் சிவக்குமாரை கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து ராமாயி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திட்டமிட்டு இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றிருப்பது தெரியவந்தது.