அரசிராமணி குறுக்குப்பாறையூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் 100 நாட்களாக போராடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் அரசிராமணி பேரூராட்சி குறுக்குப்பாறையூரில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை இடமாற்றம் செய்யக்கோரி விவசாயிகள், பெண்கள் கால்நடைகளுடன் கருப்புக் கொடி ஏந்தியும், தலையில் முக்காடு போட்டுக் கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசிராமணி பேரூராட்சி 15 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு குறுக்குபாறையூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கு குப்பைக் கழிவுகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் இங்கு குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் பயனில்லாததால் தினமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில், 100-வது நாளாக தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் தங்கவேல், விவசாய சங்க வட்டார தலைவர் ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் பெண்கள் கால்நடைகளுடன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வேறு இடத்தில் இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும், மயானத்துக்கு செல்லும் பாதையை தடுத்து கட்டிடங்கள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருப்பு கொடி ஏந்தியும் தலையில் முக்காடு போட்டும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More : ரூ.1,000 முதலீடு செய்து ரூ.8 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கலாம்..!! போஸ்ட் ஆபீஸின் அசத்தல் திட்டம்..!!