தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகமும், கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘வெற்றி நிச்சயம்’ என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் செப்.8ஆம் தேதி முதல் இந்த முகாமானது நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் 180 கால்நடை வளர்ப்போருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி மொத்தம் 6 மாதங்கள் வரை நடைபெறவுள்ளது. ஆடு, மாடு வளர்ப்பு முறைகள் மற்றும் கால்நடைகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பது குறித்த பயிற்சிகள் இதில் வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் ஆடுகள் வளர்ப்பு, நாட்டுக்கோழி, முயல், வாத்து மற்றும் கறிக் கோழி வளர்ப்பு குறித்தும் கற்றுத் தரப்படும். மேலும், வங்கிக் கடன் பெறுவது எப்படி? வெற்றிகரமாக இயங்கும் பண்ணைகளுக்கு நேரில் சென்று பயிற்சி பெறுவது போன்ற வாய்ப்புகளும் வழங்கப்பட உள்ளது.
கால்நடைப் பண்ணை அமைக்க மானியம் :
* கால்நடைப் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மானியமும் வழங்கப்படுகிறது.
* நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
* செம்மறியாடு மற்றும் வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
* பன்றி வளர்ப்புப் பண்ணைக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
எனவே, புதிய பண்ணைகள் அமைக்க விரும்பும் தொழில்முனைவோர், https://www.trilda.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் அல்லது அருகிலுள்ள கால்நடை பராமரிப்பு அலுவலகத்தை அணுகலாம்.