தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு வசதிகளையும், புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், விவசாயக் கூலி வேலை செய்யும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு என்று ‘நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம்’ என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசின் தாட்கோ (TAHDCO) நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் விவசாய நிலம் வாங்க விரும்பும் பெண்கள் உங்கள் வீட்டின் அருகே உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக நேரடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
மானியத்துடன் கூடிய நிலம் :
‘நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம்’ மூலம் தகுதியுடைய ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினப் பெண்கள் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கிக் கொள்ளலாம். நிலம் வாங்குவதற்கு ஆகும் செலவில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை தமிழ்நாடு அரசு மானியமாக வழங்கும். மேலும், நிலம் வாங்கும் பெண்களுக்கு முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் 100% விலக்கு அளிக்கப்படுகிறது.
என்னென்ன தகுதி இருக்க வேண்டும்..?
* இத்திட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் பெண்கள் இல்லை என்றால், அந்த குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர், தாட்கோ திட்டத்தின் மூலம் இதற்கு முன் எந்தவொரு மானியமும் பெற்றிருக்கக் கூடாது.
* குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் இருக்கக் கூடாது.
* விண்ணப்பிக்கும் நபர், விவசாயம் அல்லது விவசாயக் கூலி வேலை செய்து வருபவராக இருக்க வேண்டும்.
* நிலத்தை வாங்கியதும் அதை 20 ஆண்டுகளுக்கு விற்பனை செய்ய முடியாது.
* விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி..?
நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள், தங்களது அருகாமையில் உள்ள தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது, https://tahdco.com/ என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இத்திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.