தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் மேற்கண்ட பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு பிரத்யேக திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயமாக ஆயத்த ஆடை (Readymade Garments) உற்பத்தி அலகுகள் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் கடந்த 2022-23ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் ஆயத்த ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. தற்போது, அதற்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன.
இந்த மானியம் பெற சில தகுதிகளையும் தமிழ்நாடு அரசு வரையறுத்துள்ளது. குறிப்பாக, ஒரு குழுவாக இருந்தே ஆயத்த ஆடையகம் அமைக்க மானியம் கேட்டு விண்ணப்பிக்க முடியும். அந்த குழுவில் 10 நபர்கள் இருக்க வேண்டும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது 20ஆக இருக்க வேண்டும். உறுப்பினர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
குறிப்பாக உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர்களாக இருத்தல் அவசியம். சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ளவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Read More : விமான நிலையத்தில் பணிபுரிய ஆசையா..? 10, 12ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!! மாதம் ரூ.35,000 சம்பளம்..!!