இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன்கள் மனித வாழ்க்கையின் அங்கமாகவே மாறியுள்ளன. ஒரு காலத்தில் வெறும் அழைப்புகளுக்காகவே பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள், இன்று முழுமையாக பொழுதுபோக்கிற்கான கருவியாகவும், ஒருவித அடிமைத்தனத்தை உருவாக்கும் உபகரணமாகவும் மாறிவிட்டன. குறிப்பாக, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற குறுகிய வீடியோக்கள், இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளன.
சில வினாடிகளுக்குள் நம் கவனத்தை கவரும் இந்த வீடியோக்கள், நேரத்தை சாப்பிடும் “டிஜிட்டல் லூப்” ஒன்றில் நம்மை இழுத்து செல்கின்றன. சற்று நேரம் மட்டும் பார்த்துவிட்டு வேலைக்கு திரும்பலாம் என நினைத்தவர்களே, பல மணி நேரங்களைக் கழித்தும் அதிலேயே சிக்கிக் கொள்கின்றனர்.
இந்நிலையில், Neuromiage என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ள சமீபத்திய ஆய்வறிக்கையில், இந்தக் குறுகிய வீடியோக்கள் நம் மூளையின் வெகுமதி அமைப்பை தூண்டி, டோபமைன் சுரப்பை அதிகரிக்கின்றன. இது ஒரு வகை போதைப் பொருள் போன்று செயல்பட்டு, தொடர்ந்து அதே அனுபவத்தை தூண்டுகிறது. இதனால் ஒருவரின் நேரம், நினைவாற்றல், கவனத் திறன் மற்றும் முடிவு எடுக்கும் திறன் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவில் தொடர்ந்து இவ்வாறு பயன்படுத்தி வந்தால், “டிஜிட்டல் டிமென்ஷியா” எனப்படும் புதிய சிந்தனைத்திறன் குறைபாடுகள் தோன்றும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், தூக்கக்குறைவு, மன அழுத்தம் மற்றும் மனநலம் தொடர்பான சிக்கல்களும் வரும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஸ்மார்ட் போன் திரையின் மீது செலவிடாமல் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இதுபோன்ற வீடியோக்களால் ஏற்படும் விளைவுகள் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
இணையத்தின் வளர்ச்சியால் கிடைக்கும் நன்மைகளை அனுபவிப்பது அவசியம். ஆனால், அதே நேரத்தில் நம் நேரத்தையும், நம் மன நலத்தையும் காப்பதற்காக, இந்த வகை உபயோகங்களில் பொறுப்புணர்வுடன் ஈடுபட வேண்டும் என்பதையே இந்த ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.