Tea | பெரும்பாலானோருக்கு தினசரி காலை அல்லது மாலை நேரத்தில் ஒரு கப் சூடான டீ குடிப்பது, பிடித்தமான பழக்கமாகவே உள்ளது. குறிப்பாக, பாலை சேர்த்து தயாரிக்கும் டீயின் தனிச்சுவை நம்மை கவர்ந்து விடுகிறது. ஆனால், இந்த டீயை நீண்ட நேரம் கொதிக்க வைப்பது என்பது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..?
டீ தயாரிக்கும் முறையில் சிறிது கவனம் செலுத்தாததால், டீயின் உண்மையான நன்மைகள் குறையக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டீயை நீண்ட நேரம் கொதிக்க வைக்கும் போது, அதில் உள்ள டானின் எனப்படும் இயற்கை ரசாயனம் அதிகரிக்கிறது. இது உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது.
இப்படியான டீ குடித்து வந்தால், இரத்த சோகை மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. டானின் சுமாராகவே தேநீரில் இருப்பது சாதாரணம்தான். ஆனால், அதை அதிக நேரம் வேகவைத்தால் அதன் அளவு உயர்கிறது. இது செரிமானத்தையும் பாதிக்கக்கூடும்.
மேலும், பலர் ஒரு முறை டீயை தயாரித்த பின் அதை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தியும் சிலர் குடிப்பார்கள். ஆனால், இது டீயில் உள்ள ரசாயன மாற்றங்களை தூண்டும். இதில் உள்ள அமிலத்தன்மை அதிகரித்து, வயிற்றுப் பிரச்சனைகள், வாயு, அஜீரணம் போன்றவை தோன்றக்கூடும். மேலும், டீயில் சேர்க்கப்படும் பால் அதிக நேரம் கொதித்தால், அதில் உள்ள வைட்டமின் D, கால்சியம், மற்றும் சில முக்கிய புரதங்கள் அழிந்து விடும். இதனால், டீ ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பானமாக இல்லாமல், வெறும் சுவைக்காக மட்டும் குடிக்கப்படும் பானமாக மாறிவிடுகிறது.
மருத்துவ நிபுணர்கள் கூற்றுப்படி, டீயை மிகைப்படுத்தாமல், சரியான அளவில் மட்டும் தயாரிக்க வேண்டும். 4 முதல் 5 நிமிடங்கள் வரை மட்டுமே கொதிக்க வைக்க வேண்டும். தேயிலை இலைகளின் அளவும் மிதமாக இருக்க வேண்டும். ஒருமுறை டீ தயாரித்த பிறகு, அதை மீண்டும் சூடாக்கி குடிக்கக் கூடாது.
ஒரு கப் டீ தினசரி சுகாதாரத்திற்கான ஆரோக்கியமான வழியாக இருக்க வேண்டுமென்றால், அதன் தயாரிப்பு முறையில் கவனமாக இருப்பது அவசியம். இல்லையெனில், சுவைக்காக எடுத்த ஒரு தீர்மானம், நம் உடல்நலத்திற்கு மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பொறுப்புத் துறப்பு : மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் மருத்துவ நிபுணரின் தனிப்பட்ட கருத்துக்களாகும். இவற்றின் உண்மைத் தன்மையை Tamil Xpress இணையதளம் உறுதிப்படுத்தவில்லை.
Read More : இந்திய ரயில்வே துறையில் 360 + காலியிடங்கள்..!! மாதம் ரூ.35,400 சம்பளம்..!!