எடப்பாடி அருகே நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட தறி தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் கொங்கணாபுரம் அருகே இலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 43). இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். குப்புசாமி, தறி தொழில் செய்து வரும் நிலையில், இவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டு வளர்ப்பு நாயே காலில் கடித்துள்ளது. ஆனால், இவர் எவ்வித தடுப்பூசியும் போடாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து, கடந்த சில தினங்களாக ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி குப்புசாமி நேற்று (ஆகஸ்ட் 19) உயிரிழந்தார்.
முன்னதாக, சாலையில் செல்வோரையும் அந்த நாய் கடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், குப்புசாமியின் மகனையும் நாய் கடித்துள்ளது. ஆனால், அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதால், தற்போது அவர் நலமுடன் உள்ளார். ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தறி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட குப்புசாமி தண்ணீரை கூட முழுங்க முடியவில்லையாம். வெளிச்சத்தை பார்த்தாலே பயப்பட்டார். இருட்டு அறையிலேயே இருக்க விரும்பினார். கொஞ்சம் கூட காற்றே இருக்கக் கூடாது என்று குப்புசாமி உயிரிழப்பதற்கு முன்பு கூறியதாக அவரது உறவினர் பேட்டியளித்துள்ளார்.