தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்ததால், மனமுடைந்த மனைவி 12-வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் டாக்டர் ஜோதீஸ்வரி (வயது 30). இவர், எம்பிபிஎஸ் படித்த நிலையில், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, ராமநாதபுரத்தை சேர்ந்த என்ஜினியரான யோதீஸ்வரனுக்கு பெற்றோர்களால், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இருவருமே திருமணத்திற்கு பிறகு புனேவில் வசித்து வந்த நிலையில், 3 மாதங்கள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர்.
பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக சென்னைக்கு திரும்பி வந்த ஜோதீஸ்வரி, கோடம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அவரது கணவர் யோதீஸ்வரனும் சொந்த ஊரான ராமநாதபுரத்தில் வேலை பார்த்து வந்தார். அவ்வபோது, தனது மனைவியை சென்னை வந்து சந்தித்துவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை என்பதால், பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனது அக்கா வீட்டிற்கு யோதீஸ்வரி சென்றுள்ளார். காலையில் அங்கு சென்ற அவர் மாலையில் வீடு திரும்புவதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால், அவர் லிப்டில் கீழே இறங்காமல், மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து, அதாவது 12-வது மாடியில் இருந்து கீழே குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பீர்க்கன்கரணை போலீசார், ஜோதீஸ்வரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஜோதீஸ்வரி எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில், கணவர் யோதீஸ்வரன் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கஞ்சா பழக்கம் உள்ளிட்ட போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகு டேட்டிங் செயலி மூலமாக 30-க்கும் மேற்பட்ட பெண்களுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இது பற்றி அவரிடம் கேட்டபோதும் அவர் எதுவும் சொல்லாமல் தட்டிக் கழித்துள்ளார். தொடர்ந்து, தன்னை உதாசீனப்படுத்தி வருவதை அறிந்த ஜோதீஸ்வரி, கணவரின் லேப்டாப்பை ஒரு நாள் திறந்து பார்த்துள்ளார். அப்போது, அவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்தது. இதனால், மனமுடைந்த ஜோதீஸ்வரி, விபரீத முடிவெடித்திருப்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Read More : பி.இ. படித்திருந்தால் போதும் மத்திய அரசு வேலை..!! மாதம் ரூ.45,000 சம்பளம்..!!