தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு..? என்று திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன்களான தங்கபாண்டியன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருமே திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே ஒரு தோட்டத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த தோட்டம் மடத்துகுளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமானது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவில் இருவரும் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தங்கபாண்டியன் தனது தந்தை மூர்த்தியைக் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர், இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (52) சம்பவம் குறித்து விசாரிக்க நேரில் சென்றுள்ளார். அப்போது தந்தையும் மகன்களும் சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளனர். இதை தடுத்து அவர்களை சமாதானம் செய்ய சண்முகவேல் முயற்சித்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் சண்முகவேலை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், இச்சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?. திருப்பூரில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்ஐ சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டதாகவும், கோவை காவல் நிலையத்தில் எஸ்.ஐ. அறையில் ஒருவர் தூக்கிட்டு இறந்ததாகவும் செய்திகள் வருகின்றன.
காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர்?. காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்தில் ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவுக்கு அலட்சியமாக இருந்ததையும் எப்படி எடுத்துக் கொள்வது? இந்த சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான திசைதிருப்பும் வேலையைத் தான் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்.
மக்களுக்கு தேவை பாதுகாப்பான தமிழகம். மக்களைக் காக்க ஒரே வழி, திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது தான். எனவே, மேற்கூறிய வழக்குகளை முறையாக விசாரித்து குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : ஜாக்பாட்.. தமிழ்நாடு கூட்டுறவுத் துறையில் 2,000 காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க..
Leave a Reply