பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 31ஆம் தேதி நள்ளிரவு பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டது. மேலும், அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் மீண்டும் உபரி நீர் திறந்துவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு அணையின் நீர்மட்டம் 101.08 அடியாக உயர்ந்த நிலையில், அணைக்கு வினாடிக்கு 6,758 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீரும், குடிநீர் மற்றும் பாசனத்திற்கு வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் விரைவில் 120 அடியை எட்டும் என நீர்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 101.28 அடியை எட்டியுள்ளது.
அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நாளை (04.08.2025) 102 அடியை எட்டவுள்ளது. எனவே, பவானி சாகர் அணையில் இருந்து உபரி நீர், பவானி ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம். இதனால், பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு அன்று வழக்கமாக பவானிசாகர் அணையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், இம்முறை அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியுள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆடிப்பெருக்கான இன்று பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரும் ஏமாற்றத்துடன் சென்றனர்.
Read More : உங்கள் வேலையை ஏஐ பறித்துவிடுமோ என்ற அச்சமா..? இந்த 5 திறன்களை கற்றுக்கொண்டால் போதும்..!!
Leave a Reply