உடல் எடையை குறைப்பது தொடர்பாக சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், அவற்றில் சில தவறான நம்பிக்கைகள், நம் உடல் ஆரோக்கியத்தையும், எடை குறைக்கும் முயற்சிகளையும் பாதிக்கக் கூடும். எனவே, மருத்துவ நிபுணர்கள் கூறும் 7 முக்கிய தவறான நம்பிக்கைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
கார்போஹைட்ரேட் : கார்போஹைட்ரேட் சாப்பிட்டால் எடை கூடும் என்பது உண்மையல்ல. நிபுணர்கள் கூறுகையில், எல்லா கார்போஹைட்ரேட்டும் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற இயற்கை கார்போஹைட்ரேட்டுகள் நார்ச்சத்து மற்றும் சத்துக்களில் சிறந்தவை. அவை உடல்நலத்திற்கு பயனளிக்கும்.
ஆனால் வெள்ளை ரொட்டி, சர்க்கரை போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஏனென்றால், இவை எடை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே, உணவில் சமநிலையும், அளவு கட்டுப்பாடும் அவசியம்.
உணவை தவிர்க்க கூடாது : உடல் எடை குறைக்க உணவை தவிர்ப்பது என்பது சரியான முறை அல்ல. உணவை தவிர்ப்பது உடலின் மெட்டபாலிசம் வேகத்தை குறைத்து, பின்னர் அதிகமாக சாப்பிடும் பழக்கத்தையும் உருவாக்கும். உடல் ஆரோக்கியமாக செயல்பட, சரியான இடைவெளிகளில் சத்தான உணவு சாப்பிட வேண்டும். பசியைத் தாங்கும் உண்ணாவிரத முறைகள், நீண்டகாலத்தில் உடல்நலத்துக்கு பாதிப்பையே தரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொழுப்பு இல்லா உணவு : கொழுப்பு இல்லாத உணவு உடல்நலத்திற்கு எப்போதும் நல்லது என்பது ஒரு தவறான நம்பிக்கை என நிபுணர்கள் கூறுகின்றனர். பல கொழுப்பு இல்லா தயாரிப்புகளில் சுவையை அதிகரிக்க சர்க்கரை மற்றும் பிற செயற்கை சேர்மங்கள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இவை உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக, அதிகரிக்க செய்யும். அதேசமயம் அவகாடோ, பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றில் உள்ள நல்ல கொழுப்புகள், உடல்நலத்துக்கும், எடை குறைப்புக்கும் பெரிதும் உதவுகின்றன.
உடற்பயிற்சி மட்டும் போதாது : உடல் எடை குறைப்புக்கு உடற்பயிற்சி முக்கியமானது தான். ஆனால், அதை விட உணவு முறை பெரும் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமற்ற உணவு முறையுடன் உடற்பயிற்சி செய்தாலும் நல்ல பலன் கிடைக்காது. எனவே, சத்தான மற்றும் அளவான உணவையும், ஒழுங்கான உடற்பயிற்சியையும் இணைத்து பின்பற்றுவது அவசியம்.
ஒரு பகுதியில் மட்டும் கொழுப்பு குறைப்பு : உடலின் ஒரு பகுதியில் மட்டும் கொழுப்பு குறைக்கும் “ஸ்பாட் ரெடக்ஷன்” என்ற முறைக்கு விஞ்ஞான ஆதாரம் இல்லை. உதாரணமாக, வயிற்றுக் கொழுப்பை குறைக்க கிரஞ்ச் பயிற்சிகளை மட்டும் செய்வது பலன் தராது. எடை குறைப்பு உடல் முழுவதும் மெதுவாகவே நடைபெறும். இதற்காக கார்டியோ பயிற்சிகள் மற்றும் சத்தான உணவு முறையின் ஒருங்கிணைப்பு சிறந்த வழி.
இரவில் தாமதமாக சாப்பிட்டால் எடை கூடும்..? : இரவில் தாமதமாக சாப்பிட்டால் எடை அதிகரிக்கும் என்பது முழுமையான உண்மை அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எப்போது சாப்பிடுகிறோம் என்பதற்குப் பதிலாக, என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம். இரவில் சாப்பிடுவதால், தானாக கொழுப்பு சேர்க்காது. தினசரி எடுத்துக்கொள்ளும் மொத்த கலோரி அளவுதான் எடை அதிகரிப்பை தீர்மானிக்கும். எனவே, உணவு நேரத்தை விட உணவின் தரமும், அளவுமே கவனிக்கப்பட வேண்டும்.
சப்ளிமென்ட்கள் சாப்பிடலாமா..? : உடல் எடையை குறைக்க சப்ளிமென்ட்கள் உதவும் என்ற நம்பிக்கை தவறானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சமநிலையான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை எந்த சப்ளிமென்டும் மாற்ற முடியாது. இதில், பல எடை குறைக்கும் மாத்திரைகள் அதிகாரப்பூர்வமாக பரிசோதிக்கப்படாதவை. உண்மையான எடை குறைப்பு, சத்தான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி மூலம் மெதுவாகவே ஏற்படும்.
பொறுப்புத் துறப்பு : மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் மருத்துவ நிபுணரின் தனிப்பட்ட கருத்துக்களாகும். இவற்றின் உண்மைத் தன்மையை Tamil Xpress இணையதளம் உறுதிப்படுத்தவில்லை
Read More : நோய்களை வேரோடு அகற்றும் அகத்தி மரம்..!! கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள்..!!