பெற்றோருக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிச்சென்று 2 சிறுமிகள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் அக்பர்பூர் தொகுதியில் வசித்து வரும் 3 சிறுமிகளும் நெருங்கிய தோழிகள். இவர்கள் மூவரும் கடந்த மாதம் மார்க் ஷீட் வாங்கி வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டனர். 3 பேருமே குஜராத் மாநிலம் சூரத்துக்கு சென்று, அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
பின்னர், அங்குள்ள ஒரு ஜவுளி கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்துள்ளனர். இந்த 3 தோழிகளில், 2 தோழிகள் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் திருமணமும் செய்து கொண்டு கணவன் – மனைவி போல் அதே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். 3-வது தோழியும் அதே வீட்டில் தங்கியிருந்தார்.
இதற்கிடையே, தங்களது மகள்களை காணவில்லை என அவர்களது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இறுதியில்தான், அவர்கள் வேறு மாநிலத்துக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சூரத்துக்கு விரைந்த போலீசார், சிறுமிகள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து, அவர்களை கையோடு பீகாருக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருமணம் செய்து கொண்ட சிறுமிகள் இருவரும் காதலித்து வந்ததாகவும், ஒருவரையொருவர் பிரிய மனமில்லாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளனர். மேலும், தங்களது விருப்பத்துக்கு பெற்றோர்கள் இடையூறாக இருப்பார்கள் என்பதால்தான் வீட்டை விட்டு ஓடிவிட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளனர். இச்சம்பவத்தில் போலீசார் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என தெரிகிறது. தொடர்ந்து அந்த 3 சிறுமிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Read More : தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு.. ரூ.10 லட்சம் நிவாரணம்..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!