சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அருகே உள்ள கோம்பைக்காடு பகுதியில் இயங்கி வந்த ஸ்வெட்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில், வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படை போலீஸாரின் அதிரடி சோதனையில் ஒரு பெண் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னங்குறிச்சியை அடுத்த கோம்பைக்காடு பகுதியில் உள்ள ஸ்வெட்டர் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் தனிப்படை போலீஸார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்களின் ஆவணங்கள் மற்றும் பின்னணி குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அங்கு வேலை செய்து வந்தவர்களில் வங்காளதேசத்தை சேர்ந்த 12 பேர் இந்தியக் குடியுரிமை பெறாமல், சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை செய்து வந்தது தெரியவந்தது. இவர்கள் முறையான விசா மற்றும் ஆவணங்கள் இன்றி அந்த நாட்டில் இருந்து சேலத்திற்கு வந்து பதுங்கி இருந்தது உறுதியானது.
இதையடுத்து, சட்ட விரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த ஒரு பெண் உட்பட 12 பேரையும் போலீஸார் உடனடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களை போலீஸார் தனி வேன் மூலம் அழைத்துச் சென்று, ஆத்தூரில் உள்ள வங்காளதேச அகதிகள் முகாமில் தங்க வைத்தனர். தொடர்ந்து இவர்கள் மீது சட்டவிரோத குடியேற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
Read More : அரசிராமணி பகுதிகளில் புதிய கிளை நூலகங்கள்..!! மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு..!!












